( வி.ரி.சகாதேவராஜா)
இந்தியாவில்
கடலுடன் சேர்ந்து காணப்படுகின்ற திருச்செந்தூர் முருகன் ஆலயம் போன்று,
இலங்கையிலே இந்த திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் பிரமாண்டமாக
அழகாக உள்ளது. இங்கு வந்ததில் பெரும் மகிழ்ச்சி. இந்த ஆலயம் மேலும்
சிறப்பாக புதுப்பொலிவு பெறும்.
இவ்வாறு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (3) வியாழக்கிழமை இரவு
ஆலய திருவிழாவில் கலந்து சிறப்பித்த போது தெரிவித்தார்.
திருக்கோவில்
சித்திர வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ்
தலைமையில் அவருக்கான பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக வீதியில் இருந்து பொம்மலாட்டம் நடனம் சகிதம் ஆளுநருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆலயத்திற்கு
வந்தபோது ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் ஆளுநருக்கு
பரிவட்டம் கட்டி பழத் தட்டு வழங்கி வரவேற்றார்.கூடவே ஆலய குரு சிவஸ்ரீ
அங்குசநாதக்குருக்களும் வரவேற்றார்.
அங்கு
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பொதுச்செயலாளர் கலாநிதி எம்.
கோபாலரெத்தினம் ,கிழக்கு மாகாண கலாச்சார பணிப்பாளர் ச. நவநீதன்,
திருக்கோவில் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன், கல்முனை வடக்கு பிரதேச
செயலாளர் ஜே.அதிசயராஜ், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.
குணபாலன், திருக்கோவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஐ.கமல்ராஜ் உள்ளிட்ட
பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சிகளை உதவி கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.
அங்கு
,ஆளுநருக்கு ஆலயத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் பொன்னாடை போர்த்தி
கௌரவித்தார். நினைவுச் சின்னத்தை செயலாளர் எஸ்.செல்வராஜா சார்பில் பதில்
செயலாளர் எஸ்.சதீஸ்குமார் வழங்கி வைத்தார்.
அங்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் பேசுகையில்...
சோழர்
காலத்திலே நிர்மாணிக்கப்பட்ட இந்த பழம்பெரும் புராதன ஆலயத்தின் வரலாறு
தொடர்பாக கிழக்கு மாகாணத்துக்கு வர முதலே நான் அறிந்திருந்தேன். இறைவன்
அருளால் கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்த பொழுது இந்த ஆலயத்திற்கு செல்ல
வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அது இன்று திருவிழா நேரத்திலே கைகூடி
உள்ளது .உண்மையிலே சந்தோஷமாக இருக்கின்றது . கிழக்கிலே மிகவும் அழகான
பிரமாண்டமாக உள்ள ஆலயத்திற்கு முன்னாலுள்ள கடல் மேலும் சிறப்பாக
உள்ளது.இந்த ஆலயம் மேலும் சிறப்பாக பொலிவுபெறும் .அந்த நம்பிக்கை
இருக்கின்றது. அனைவருக்கும் நன்றிகள். என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours