(சுமன்)
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.வடக்கில் மன்னார் மாவட்டத்திலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று கல்லடிப்பாளத்தில் இருந்து காந்திப்பூங்கா வரையில் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு காந்திப் பூங்காவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுது.
கல்லடிப் பாளத்தில் போராட்ட காலத்தில் உயிரிழந்த உறவுகளுக்கும், மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் அவர்களைத் தேடும் வகையான, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிய கோசங்களை எழுப்பியவாறும், பாதாதைகளையும் ஏந்தியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் காந்திப் பூங்காவை வந்தடைந்ததும், காந்திப் பூங்காவில் அமைந்துள்ள கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் தூபியில் சுடரேற்றி ஊடகவியலாளர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் போராட்ட அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலராஜ் அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டப் பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தில் வடக்கு கிழக்கு தலைவி யோகராசா கனகரஞ்சனி, மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறவுகள், சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours