(சுமன்)

இன்றைய தினம் மயிலத்தமடு பிரதேசத்தில் காலநடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் முகமாக களவிஜயம் மேற்கொண்டிருந்த சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட குழுவினரை அங்கு அத்துமீறிய விவசாய நடவடிகைகளில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மையினத்தவர்கள் சுற்றிவளைத்து தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவ்வாறு செய்தவர்களுக்கு உடன் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி மட்டக்களப்பு ஊடகவியலாளர்களால் இன்று மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மயிலத்தமடு பிரதேசத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காகச் சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அங்கு அனுமதியற்ற முறையில் அமையப்பெற்ற விகாரையின் பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினரே தடுத்து வைத்து ஊடகவியலாளர்களின் கமராகள் பறிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்.

பல காலமாக மயிலத்தமடு பிரதேசத்தில் பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சனைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காகவே இன்றைய தினம் இக்களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

பண்ணையாளர்களுடன் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடலினை மேற்கொண்டதன் பின்னர் திரும்பிச் செல்லும்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை பிடிப்பவர்கள் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் இனைந்து அனைவரையும் வழியில் மறித்து இவ்வாறான செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தனர்.இவ்விடயம் அறிந்த மாவட்டத்தின் ஏனைய ஊடகவியாளர்கள் மயிலத்தமடுவிற்குச் சென்ற குழுவினர் தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தடுப்பில் ஈடுபட்டவர்கள் மீது உடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி திடீர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் மட்டக்களப்பின் ஊடகசங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours