(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பன்னாட்டு மக்கள் பக்தியுடன் சங்கமிக்க வெலிகமையில் தொடர்ந்தும் 18ஆவது ஆண்டாக அத்-தரீக்கத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ள நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீலாதுந் நபிப் பெருவிழா வெலிகாமம், இலக்கம் 52, புஹாரி மஸ்ஜித் மாவத்தை, 'பைத்துல் பரகாஹ்' இல்லத்தில் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா (வாப்பா நாயகம்) அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் (ஜம்இய்யதுல்) உலமாவின் பொதுச்செயலாளர் அஃப்ழலுல் உலமா, டாக்டர் அன்வர் பாதுஷா (உலவி) P.hD. ஹழ்ரத், சென்னை சுன்னத் வல் ஜமாஅத் பேரவைத் தலைவர் மௌலவி டாக்டர் ஷெய்கு அப்துல்லாஹ் (ஜமாலி)P.hD ஹஸ்ரத், மன்பவுஸ் ஸலாஹ் அறபுக்கல்லூரிப் பேராசிரியர் மௌலவி முஸ்தஃபா (மஸ்லாஹி) மற்றும் பிரபல கஸீதாப் பாடகர் அஹ்மத் ஸாலிஹ் பஹீமி ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இன்று (27) புதன்கிழமை முதல் 29ஆம் திகதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இவ் விழாவில், இன்று 27ஆம் திகதி மாலை 4:00 மணிமுதல் 'புர்தா ஷரீப்'' மற்றும் ''ஃபரீததுன் நளரிய்யா, மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து 'ரசூல் மாலை' இடம்பெற்றதுடன் நாளை 28ஆம் திகதி காலை 10:00 மணிக்கு மாநபி புகழ் பாடும் 'ஸுப்ஹான மௌலூத், தக்மீஸ் முஹம்மதிய்யா மஜ்லிஸ், மஃரிப் தொழுகைக்குப் பின் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் புனித 'ராத்திப் மஜ்லிஸ்'. நாளைமறுதினம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப.2:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை பிரபல உலமாக்களின் உரைகளும் நூல் அறிமுகம் மற்றும் நபிபுகழ் பாடல், கஸீதாக்களின் ஓடியோ வெளியீடும் இடம்பெறும்.
அங்கு இடம்பெறும் நூல் அறிமுகமும் (கஸீதா) பாடல்கள் வெளியீட்டில், முன்னாள் இலங்கை கல்வி இலாகாவின் அறபுப் பரீட்சை சபைத் தலைவரும், அகில இலங்கை உலமா போர்ட் முன்னாள் தலைவரும், அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஷெய்காகத் திகழ்ந்த குத்புல் ஃபரீத் இமாம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் ஆத்மீக வெளிப்பாடான 'யவானிஉ அஸ்மாருந் நிஉமாஉ'' எனும் ஞான அகமிய நூலுக்கு எகிப்து நாட்டுக்கான அக்பரிய்யாத் தரீக்கத்தின் ஷெய்காகத் திகழும் ஷெய்ஹ் அஹ்மத் பரீத் அல் மஸீதி (அஸ்ஹரி) அவர்கள் எழுதிய விரிவுரையான 'மிஷ்காதுல் அவ்லியா ஷரஹ் யவானிஉ அஸ்மாருந் நிஉமாஉ' மற்றும் சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா அவர்கள் இயற்றிய உமர் (ரலி) புராணம் ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வும் மற்றும் யாநபி ஸலாம் பைத், தலஅல் பத்ரு அலைனா ஆகிய அறபு பைத்துக்களுக்கு மௌலானா நாயகம் இயற்றிய தமிழ் கஸீதா வெளியீடும், நபிபுகழ் காவியமான நாயகர் பன்னிரு பாடல் நூலில் இருந்து பாகம்-1 தாஜ் நூர், சாஜித் கானின் இசையில் அஹ்மத் ஸாலிஹ் பாம்பா பாக்யா பாடிய ஓடியோ வெளியீடும் நடைபெறும்.
Post A Comment:
0 comments so far,add yours