(எஸ்.அஷ்ரப்கான்)
 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றினை வலியுறுத்தி நாடு பூராகவும் நடைபயணம் ஒன்றினை மேற்கொள்வதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச இமாம்கள், முஅத்தீன்கள் மற்றும் ஆலிம்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (10) ஏறாவூர் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை நிலையினை கண்டறியும் பொருட்டு, முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் வேற்றுமைகளை களைந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதற்காக நாடு பூராகவும் நடைபயணத்தை மேற்கொண்டு சர்வதேச விசாரணை ஒன்றினை கோர வேண்டும்.

முஸ்லிம் சமூகம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டை காட்டிக்கொடுத்த வரலாறு கிடையாது. ஏனைய சமூகங்களுடன் ஐக்கியமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து முன்னுதாரணமாக செயல்பட்ட சமூகம். இலங்கை திருநாட்டிலே கௌரவமாக தலைநிமிர்ந்து வாழ்ந்த முஸ்லிம் சமூகம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தலைகுணிந்து வாழவேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானது. 

முஸ்லிம் சமூகத்தோடு மிகவும் நெருக்கமாகவும், விசுவாசமாகவும்  இருந்தவர்கள் கூட குறித்த தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களை தீவிவாதிகள், பயங்கரவாதிகள் போன்று சந்தேகக்கண்கொண்டு பார்க்கத்தொடங்கினர். நாட்டிலே இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் சீர்குலைந்து காணப்பட்டது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் யார் தொடர்புபட்டார்கள், எவ்வாறு செய்தார்கள் எதற்காக செய்தார்கள் என்கின்ற விடயங்கள் எல்லாம் இன்று சனல் 4 வெளிட்ட காணொளி ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது சாதாரண விடயமல்ல. இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்ற குறித்த சதித்திட்டத்தின் உண்மை நிலையினை உலகறியச் செய்வதற்கு சகல தரப்பினரும் ஒன்றுபட்டு செயல்படுவது காலத்தின் தேவையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் வேண்டுகோளின் பேரில் அஸீஸா பவுண்டேஷன் ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள இமாம்கள், முஅத்தீன்கள் மற்றும் ஆலிம்கள் என சுமார் 220பேருக்கு இந்நிகழ்வின் போது உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அஸீஸா பவுண்டேஷன் பணிப்பாளர் சாதிக் ஹசன், சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.பி.கபூர்தீன், சமூக செயற்பாட்டாளர் றிஸான் ஹாஜியார், உப பொலிஸ் பரிசோதகர் சரூக், ஜம்மிய்யதுல் உலமா சபை ஏறாவூர் கிளை தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours