பெரெண்டினா  நிறுவனத்தினால்  வாடிக்கையாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள்  வழங்கிவைக்கும் "உங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும்... லைஃப் லைன்" நிகழ்வு கல்முனை  கிளையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று முன்தினம்(21) வியாழக்கிழமை  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், வாடிக்கையாளர்களுக்கான வாழ்வாதார உதவி கொடுப்பனவுகளையும் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வின் போது  பெரெண்டினா நுண்நிதி  நிறுவன பிரதேச முகாமையாளர் பா.பிரதிலிபன், பெரெண்டினா நிறுவனத்தின் கல்முனை  முகாமையாளர் கே.கோபிகரன், வியாபாரஅபிவிருத்தி  உத்தியோகத்தர் எஸ்.ஜெயரூபன் மற்றும்  பெரண்டினா ஊழியர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.

 முதற்கட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் இந்நிகழ்வில் 50 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் 1550 பயனாளிகளுக்காக மொத்தமாக சுமார்  5.5 மில்லியன் ரூபாய் நிதி நாவிதன்வெளி மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 6 கிளைகளுடன் 13000 த்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட இந் நிறுவனத்தினால் வாழைச்சேனை , செங்கலடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி,கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வாடிக்கையாளர்களிற்கு மொத்தமாக 45 மில்லியன் ரூபாய்  நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.  


பெரெண்டினா தன்னார்வ மற்றும் நிதி நிறுவனத்தின் மூலம்  மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான பல்வேறு செயற்திட்டங்கள் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மாவட்டத்தில்  போசாக்கு குறைபாட்டை  நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு செயற்றிட்டம் பெரண்டினா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிறுவனத்தினால்  மாவட்டத்தில் உணவு தட்டுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக  வீட்டுத்தோட்ட செய்கையை ஊக்குவிப்பதன் மூலம் தமது  அன்றாட உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கான   உதவிகள் செய்துவருவது மட்டுமல்லாது செய்கைக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

(வி.ரி.சகாதேவராஜா)






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours