(சுமன்)




2009ல் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்ற கூறும் நீங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வைக் காண்பதற்கு முயற்சி செய்யாமல் வடக்கு கிழக்கிலே புத்த சிலைகளை நிறுவி, பெரும்பான்மையினரைக் குடியேற்றி தமிழ் பேசும் மக்களின் குடிப்பரம்பலைக் குறைப்பதையே அரசு நிகழ்ச்சி நிரலாக வைத்துக் கொண்டால் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தமிழீழக் கனவு எவ்வாறு இல்லாமல் போகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்;றைய தினம் பாராளுமன்ற அமர்;வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்ரர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான சனல் 4 குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழு ஒன்றினை நியமிப்பதற்காக யோசனை அரச தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன? இது தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்காகவா? இல்லை காலம் கடத்துவதற்காகவா? விசாரணை என்ற போர்வையில் உண்மையை மூடி மறைப்பதற்காகவா? என்ற ஐயம் எனக்குள் எழுகிறது.

ஏனெனில் எமது கடந்த கால அனுபவங்களின் படியும், ஆட்சியாளர்களின் கடந்த கால செயற்பாடுகளின் படியும், இதனை நோக்கின் பாராளுமன்ற விசேட குழுவின் நோக்கமானது இந்தப் பிரச்சினையை இழுத்தடிப்பதைத் தவிர இது தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்காக அல்ல என்ற உண்மையை அனைவரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

நாட்டில் அவ்வப்போது பாரதூரமான பிரச்சினைகள் எழுகின்றபோதெல்லாம் ஏற்படும் எதிர்க் கட்சியினரின் அழுத்தம் அல்லது சர்வதேச அழுத்தம், தமிழ்த் தரப்பின் அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் அரசு செய்கின்ற விடயம் இது தொடர்பாக ஆராயந்து அறிக்கை சமர்ப்பிக்கவென ஒரு குழுவினை நியமிப்பதாகும். ஆந்தக் குழுவின் அறிக்கை அரசுத் தலைவரிடம் கையளிப்பதாக ஊடகங்களில் ஒரு செய்தியும் வெளிவரும். அத்தோடு அந்தச் சம்பவம் அடியோடு மறக்கப்பட்டுவிடும். இதுவே அரசு நியமித்த ஆணைக்குழுக்கள் தொடர்பிலான கடந்தகால வரலாறு. அந்த விசாரணைக்குழு அறிக்கையினை அடிப்படையாக வைத்து எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக வரலாற்றில் எவ்வித பதிவுகளும் இல்லை. குறைந்த பட்சம் இத்தகைய அறிக்கைகள் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பார்வைக்கோ அல்லது பொது மக்கள் பார்வைக்கோ சமர்ப்பிக்கப்படுவதும் அரிதாகவே காணப்படும் நிகழ்வாகும்.

உண்மையைக் கூறப்போனால் சில அறிக்கைகள் திறந்து பார்க்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுக் கிடந்ததே வரலாறாகும். சன்சோனி ஆணைக்குழு காலத்திலிருந்து அண்மைய ஈஸ்ரர் குண்டுத் தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவரை இது பொருத்தமானதாகும். ஏற்கனவே அரச தரப்பால் நியமிக்கப்பட்ட ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பாக விசாரணைக்குழு அறிக்கையில் அரசு திருப்திப்படவில்லையா? அவ்வறிக்கையினை முழுமையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காததன் பின்னணி என்ன? அவ்வாறு முழுமையாக சமர்ப்பித்தால் அப்போது அரச தரப்பினராக இருந்தவர்களது அல்லது ஒரு குண்டுவெடிப்பொன்றுக்காகக் காத்திருந்த பல அரசியல்வாதிகளது இராணுவ, பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளது வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடுமென்ற பயமா? இவ்வறிக்கைகள் முழுமையாக வெளியிடப்படாமலிருப்பதன் காரணமாகவே சமூக ஊடகங்களும் வெகுசனத் தொடர்பு சாதனங்களும் இவை தொடர்பான நியாயமான சந்தேகங்களை கேள்விகளாக வைக்கின்றன. இதற்காக புதிய ஒரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஆக்குவதன் மூலமோ, நிகழ்நிலைக் காப்பு பற்றிய சட்டங்களை இயற்றியோ இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசு தப்பிக்க முயலக்கூடாது.

உண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 கூறுவதென்ன? அதில் முக்கிய கருத்தாளரான ஆசாத் மௌலானா கூறியது என்ன? உண்மையில் நான் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படமும் அதன் கருத்தாளர் ஆசாதா மௌலானா கூறிய வாக்குமூலமும் வேத வாக்கியங்கள் போல தம்ம பத வாக்கியங்கள் போல, அல் குர்ஆன் வாக்கியங்கள் போல, பைபிள் போல புனித வாக்கியங்கள் என்று கூற வரவில்லை. இதற்காக அந்த ஆவணப்படமும் அதன் கருத்தாளர் ஆசாத் மௌலானா கூறியவற்றில் உண்மைத் தன்மை எதுவுமில்லையென்று இலகுவாகப் புறமொதுக்கவும் முடியாது. உண்மையில் ஆசாத் மௌலானா பாதுகாப்புத் துறை, நீதித்துறை, உளவுத்துறை தொடர்பான உயர் அதிகாரிகளின் பெயர்கள், அவர்கள் வகித்த பதவிகள், யாவற்றையும் துல்லியமாகக் கூறியுள்ளார்.

இவற்றில் எவையும் பொய்யாகக் காணமுடியாது. அதே போல மட்டக்களப்புச் சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவங்கள், சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரிகள், சில நீதிபதிகளின் பெயர்கள், குறிப்பிட்ட ஒரு வழக்கின் போது நீதிபதிகள் மாற்றப்பட்ட சம்பவம் போன்ற பலவற்றைக் கூறுகின்றார். உண்மையில் இவைகள் நடைபெற்றேயுள்ளன. எந்தவிதமான தொடர்பற்ற ஒருவரால் இவ்வாறு நபர்களின், திணைக்களங்களின், பெயர்களைக் கூறி, நடைபெற்ற சம்பவங்களைக் கூறி கற்பனையாக புனைய முடியாது என்பதே உண்மையாகும்.

அதனால்தான் இன்று இவை தொடர்பான உண்மைத் தன்மையினை அறிவதற்காக நீதியான நடுநிலையான சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று தேவையென்ற கோரிக்கை இன்று எழுந்துள்ளது. இதுவரை உள்ளக விசாரணையின் நம்பிக்கையீனம் பற்றி தமிழ்த் தரப்பே கூறிவந்தது. ஆனால், இன்று உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை சர்வதேச விசாரணை இது தொடர்பாகத் தேவையென எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் அனைவரும் கத்தோலிக்க ஆயர் உட்பட ஆயர் பேரவையினரும் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

தமக்குச் சார்பான தீர்ப்;பினைப் பெறுவதற்காக நீதித்துறையினை அரச தரப்பு பாவித்த முறை தொடர்பாக புதிதாக ஏதும் கூறத் தேவையில்லை. இது நமது நாட்டில் இடம்பெறாத சம்பவமும் இல்லை. முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவரே தமது பக்கச்சார்புத் தீர்ப்புப் பற்றி தாம் பதவி விலகிய பின்னர் திறந்த வாக்குமூலம் அளித்த வரலாற்றைக் கண்டது நம் நாடு.

எனவே சனல் 4 தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலகுவாக, வழமைபோல ஏற்க முடியாது என வேண்டுமானால் உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது. என்றோ ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கும் மேலாக கடந்த கிழமை ஜனாதிபதி செயலகத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளை நாங்கள் அழித்துவிட்டோம். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழக் கனவு இன்னும் ஓயாமல் இருப்பதாக முன்னாள் அமைச்சார் ஒருவர் கூறியிருக்கின்றார்.

நானும் ஒரு விடுதலைப் போராளி என்ற வகையிலே எமது மக்களின் மனநிலையில் இருந்து கூறுகின்றேன் உண்மையிலேயே தமிழீழக் கனவு தனிநாட்டுக் கனவு என்பது இன்னும் எமது மக்கள் மத்தியில் இருந்து இல்லாமல் செல்வதற்கு, அழிவதற்கு உங்களைப் போன்ற ஒரு சில அமைச்சர்கள் விரும்பவில்லை என்பதைத் தான் நான் கூறுகின்றேன.

இதனையே வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் கட்டியம் கூறுகின்றன. இன்று வடக்கில் இருந்து கிழக்கு வரை தயிட்டி விகாரை, வெடுக்குநாறிமலை விகாரை, குருந்தூர்மலை விகாரை, திருகோணலையில் பல விகாரைகள், அம்பாறையில் தமிழர் பிரதேசங்களில் பல விகாரைகள் என அமைக்கப்படுகின்றன. இதற்கும் மேலாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே பண்ணையாளர்கள் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்கள் மாடுகளை மேய்ப்பதற்கான பாரம்பரிய மேய்ச்சற் தரையினை அயல் மாவட்ட பெரும்பான்மையின மக்கள் பயிர்செய்வதென்ற கோதாவிலே அந்தப் பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று அந்தப் பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை மேய்க்க முடியாமல் அதனால் ஈட்டும் வருமானங்;களை இழந்து தவிக்கின்றார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி உடனடியாக அத்துமீறிக் குடியேறியிருப்பவர்களை நீதிமன்ற உத்தரவைப் பெற்று அங்கிருந்து அகற்றுமாறு பொலிசாருக்கும், மகாவலி அதிகாரசபைக்கும் உத்தரவு வழங்கியிருக்கின்றார். அதேபோன்று அந்தப் பிரதேசத்தில் ஆக்கிரமித்துள்ள அயல் மாவட்ட மக்களுக்கு அந்த அந்த மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கு இடம் வழங்குமாறும் கூறியிருக்கின்றார்.

ஆனால் நேற்று அங்கு என்ன நடந்திருக்கின்றது. முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத் அவர்களும், அடாவடி பிக்கு அம்பிட்டிய தேரர் அவர்களும் புதிதாக ஒரு புத்த சிலையை அங்கு கொண்டு சென்று வைத்துள்ளார்கள். ஜனாதிபதி ஒரு முடிவினை எடுக்கின்றார். அவர் முடிவினை அறிவித்து மறுநாளே இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் நாங்கள் என்ன சிந்திக்க வேண்டும். இந்த நாட்டை ஆள்வது ஜனாதிபதியா? பாராளுமன்றமா? அல்;லது புத்த பிக்குகளா? வியத்மக அமைப்பினரா? என்ற சந்தேகமே எழுகின்றது.

இவ்வாறான விடயங்களை நோக்கும் போது தமிழீழக் கனவு எவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இல்லாமல் செல்லும். அந்த வகையில் இனப்பிரச்சனை தீரவேண்டும் என்பதற்காக 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்ற கூறும் நீங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வைக் காண்பதற்கு முயற்சி செய்கின்றீர்களா என்றால் இல்லை. மாறாக வடக்கு கிழக்கிலே புத்த சிலைகளை நிறுவி, பெரும்பான்மை மக்களைக் குடியேற்றி வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் பேசும் மக்களின் குடிப்பரம்பலை குறைப்பதே உங்களது நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது. இந்த நிலை தொடருமானால் இந்த நாடு பிளவுபடுவதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours