(எம்.ஏ.றமீஸ்)

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உட்புகுந்த காட்டு யானைகள் சில பல்வேறு தேசங்களை உண்டு பண்ணியுள்ளதோடு, ஆசிரிய ஆலோசகர் ஒருவரை பலமாக தாக்கியுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியினை அண்டிய பகுதிக்குள் இன்று(22) அதிகாலை 1.30 மணியளவில் உட்புகுந்த காட்டு யானைகள் சில மக்கள் குடியிருப்புப் பகுதிகளின் கட்டடங்கள், சுற்றுமதில்கள், வர்த்தக நிலையங்கள், அசிரி ஆலை போன்றவற்றை தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன், பயன்தரும் தாவரங்களையும் நாசப்படுத்தியுள்ளன.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் ஒருவர் தமது நெல் விவசாயச் செய்கைக்கென அட்டாளைச்சேனை சம்புநகர் பிரதேசத்தினை நோக்கி அதிகாலை வேளை பயணித்துக் கொண்டிருந்த போது காட்டு யானைகள் சில அவரை வழி மறித்து தாக்கியுள்ளன. இச்சம்பவம் அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆசிரிய ஆலோசகர் சம்புக்களப்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், காட்டு யானைகள் மூன்று இவரை வழி மறித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இவர் காட்டு யானைகளைக் கண்ணுற்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு அருகிலிருந்த கால்வாய்க்குள் இறங்கி நின்றுள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக யானைகளின் நடமாட்டத்தினை காணாததால் வீதிக்கு அவர் வந்த வேளையில், மரங்களின் பின்னால் மறைந்து நின்ற யானைகள் அவரை தாக்கி தூக்கி வீசியுள்ளது. இதனால் பலத்த காயங்களுக்கு இவர் இலக்கானதுடன், இவரது கால் கைகளுக்கும் உடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரிய ஆலோசகர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியினை அண்டிய பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள், அரிசி ஆலை ஒன்றினுள் புகுந்து ஆலை இயந்திரங்கள், கட்டடத்தின் சுற்று மதில்கள் போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளன. இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, அக்கரைப்பற்றில் உள்ள பேக்கரி நிறுவனமொன்றினுள் புகுந்த காட்டு யானைகள் சுற்று மதில்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், நுழைவாயில்களையும் நாசப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில வாரங்களாக இப்பகுகியில் காட்டு யானைகள் உட்புகுந்த இவ்வாறான பல்வேறு சேதங்களை உண்டு பண்ணி வரும் யானைகளின் அட்டகாசத்தினை கட்டுப் படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours