பொத்துவில்
ஆதார வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவதற்கான விடுதி
வசதியொன்றினை ஏற்படுத்தவுள்ளதாகவும், சுகாதார அமைச்சிடம் அதற்கான
அனுமதியினை கோரியுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைத்தியசாலைகளை
வருமானம் ஈட்டுகின்ற நிறுவனங்களாக மாற்றி வைத்தியசாலைகளை அபிவிருத்தி
செய்கின்ற திட்டமொன்றினை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளோம். குறித்த
திட்டத்தினை முதற்கட்டமாக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில்
செயற்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
பொத்துவில் அறுகம்பே பிரதேசம் இலங்கையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு இடமாகும். இங்கு
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து
செல்கின்றனர். இவர்கள் தங்களது சுகாதாரத் தேவைகளைப் பெற்றுக்கொள்ள
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கே வருகின்றனர்.
உல்லாசப்
பயணிகளினதும், பொதுமக்களினதும் நலன்கருதி, குறித்த வைத்தியசாலையில்
கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி வசதிகளை ஏற்படுத்தவுள்ளோம்.
அதன்மூலம் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கி சிகிச்சை
பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அதிக வருமானம் ஈட்டுகின்ற நிறுவனமாகவும்
குறித்த வைத்தியசாலை மாற்றம் பெரும். இவ்வாறான சேவையினூடாக கிடைக்கின்ற
வருமானத்தினை கொண்டு அந்த வைத்தியசாலையினை பாரியளவில் அபிவிருத்தி செய்ய
முடியும்.
அரசாங்கம்
சுகாதாரத்துறைக்கு அதிகமான நிதியினை செலவிட்டு வருகின்றது. இத்திட்டத்தின்
ஊடாக சிறந்த சேவையினை வழங்கி வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதே எமது
நோக்கமாகும். இதுதொடர்பில் ஆராய்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் கல்முனைப் பிராந்தியத்துக்கு வருகை
தரவுள்ளனர் எனவும் பணிப்பாளர் றிபாஸ் மேலும் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours