எம்.ஏ.றமீஸ்-
ஊடகத் துறை வித்தகர் விருதிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இலங்கை வானொலி பிறை எப்.எம். பிரதிப் பணிப்பாளர் பசீர் அப்துல் கையூம்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2023ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழா மிக விரைவில் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவினையொட்டி மாகாண மட்டத்தில் உள்ள துறைசார்ந்தோர் தெரிவு செய்யப்பட்டு இவ் இலக்கிய விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர். இதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் உள்ள ஐம்பது வயதிற்கு மேற்பட்ட துறைசார்ந்த கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உயரிய விருதான வித்தகர் விருது வழங்கப்படவுள்ளது. இவ்வாண்டின் ஊடகத்துறை வித்தகர் விருதிற்கென தெரிவு செய்யப்பட்டிருப்பவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் பிரதிப் பணிப்பாளர் கம்பீர குரல் கொண்ட பசீர் அப்துல் கையூம்.
மருதமுனையினைச் சேர்ந்த பசீர் அப்துல் கையூம் 1968.02.05 இல் பிறந்தவர். மர்ஹூம் முஹம்மது பஷீர், உம்மு ஸல்மா தம்பதியரின் புதல்வரான இவர் இளம் வயது முதல் ஊடகத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயற்பட்டு வருகின்றார்.
மருதமுனை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலைகளான அல்-ஹம்றா வித்தியாலயம் மற்றும் ஷம்ஸ் மத்திய கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியினை தொடர்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் காலை ஆராதனை நிகழ்வுகளில் செய்தி வாசிப்பு, குறித்தொதுக்கப்படும் தலைப்பில் பேசுதல் மற்றும் நற்சிந்தனை வழங்கல் போன்றவற்றை திறன்பட தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளார். இதனால் அப்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினரதும் நன்மதிப்பினையும் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டவர்.
இவர் 1987 ஆம் ஆண்டு பாடசாலை கல்வியினைத் தொடர்ந்து கொண்டிருந்த காலப்பகுதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய 'இளைஞர் பரிசளிப்பு விழாவில்' தேசிய ரீதியிலான பேச்சுப் போட்டியில் முதல் இடம்பெற்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் கரங்களினால் விஷேட விருதினை பெற்றுக் கொண்டவர்.
கலை இலக்கிய விளையாட்டு ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் தொடர்ச்சியாக தனது திறமைகளை வெளிக்காட்டி பல்வேறு பரிசில்கள் பாராட்டுதல்கள் மற்றும் விருதுகள் போன்றவற்றை பெற்றுக் கொண்டார். பேச்சு, அறிவிப்பாளர், விவாதம் மற்றும் பொது அறிவு ஆகிய போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை இவர் தனதாக்கிக் கொண்டவர்.
1990ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அறிவிப்பாளர் போட்டியில் இவர் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் திருக் கரங்களினால் விருதினைப் பெற்றுக் கொண்டவர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டதாரியான இவர் பல்கலைக்கழக காலப் பகுதியில் பல்துறை திறமைகளை வெளிக்காட்டி வந்துள்ளார். இப்பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் உப தலைவராகவும், சங்கீத நாட்டிய சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வந்துள்ளார். இப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு மேடை நிகழ்வுகளை திறம்பட தொகுத்து வழங்கியதோடு கவிதை, விவாதம் மற்றும் பேச்சு போன்ற துறைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியவர். இதனால் துறைசார்ந்தோரின் நன்மதிப்பினையும் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டவர்.
1992 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தினால் நடத்தப்பட்ட குரல் தேர்வின்போது கம்பீர குரல் மூலம் தெரிவான இவர் இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராக இணைந்து கொண்டார். தனது பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் 1996 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையில் 'நிகழ்ச்சித் தயாரிப்பாளராக' நிரந்தர நியமனத்தினைப் பெற்றுக் கொண்டார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிரந்தர நியமனத்தினைப் பெற்றுக் கொண்ட இவர், நிகழ்ச்சி அமைப்பாளர், சிரேஷ்ட நிகழ்ச்சி அமைப்பாளர், பதில் கட்டுப்பாட்டாளர், கட்டுப்பாட்டாளர், பிரதிப் பணிப்பாளர் என உயர் பதவிகளை அலங்கரித்தவர்.
2005 ஆம் ஆண்டு அப்போதைய ஊடகத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸடீனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவை நிலையமான பிறை எப்.எம்.வானொலி ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் முதலாவது கட்டுப்பாட்டாளராக இவர் செயற்பட்டவர். அன்று முதல் இன்று வரை இப்பதவியில் அவர் தொடர் சேவையாற்றி வருகின்றார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள 07 பிராந்திய வானொலிகளுள் முன்னோடி வானொலியாகவும், அதிக இலாபமீட்டும் வானொலியாகவும் உள்ள பிறை எப்.எம். வானொலியை தலைமை அதிகாரியாகக் கொண்டு வழிநடத்திச் செல்வதில் இவருக்கு அளப் பரிய பங்குண்டு.
கடந்த 2006 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் அரச விருந்தினருக்கான அழைப்பினைப் பெற்று புனித ஹஜ் கடைமைக்காகச் சென்று அவ்வாண்டு புனித அறபா மைதானத்தில் இருந்து அறபா நிகழ்வுகள் மற்றும் பேருரை போன்றவற்றை மக்கள் பயன்பெறும் வகையில் இலங்கை ஒலிபர்புக் கூட்டுத்தாபனத்திற்காக நேரடி அஞ்சல் செய்தவர். அத்தோடு பல உம்றா யாத்திரை நிகழ்வுகளை வானொலிக்காக நேரடி ஒலிபரப்புச் செய்த பெருமையும் இவரைச் சாரும்.
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் கலைஞர்களை கௌரவிக்கும் திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டு 'கலைஞர் சுவதம்;' விருது இவருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளதோடு, பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் இவரது சேவைக்காக கலைமாமணி, தியாகத் தென்றல், கலைத் தீபம், மகா உன்னதன், கலையொலி, திறனாளி, கருக்கொடி மகுடம், ஊடக ஒளி மற்றும்; தேச அபிமானி போன்ற பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
மேடை அறிவிப்பில் அதிக நாட்டம் கொண்ட இவர் பல அரச மற்றும் பொது நிகழ்வுகளின் சிறந்த தொகுப்பாளராக செயற்பட்டு பல்வேறு மட்டத்தினரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார். இலங்கை ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள் மற்றும் பிரபல அமைச்சர்கள் போன்றோர் பங்கு பற்றும் பல்வேறு நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய அனுபவம் பெற்ற இவர் அரச தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் போன்றோரின் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டவர்.
கொரோனா காலப் பகுதி மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய சூழ்நிலைகளில் மக்கள் நடந்து கொள்ள வேண்டிய சுகாதார பின்பற்றுதல்கள், வாழ்க்கை நடைமுறைகள் போன்றவற்றை வானொலி மூலம் வழங்கி மக்களை சிறந்த முறையில் வழிப்படுத்ய பெருமையும் இவரைச் சாரும். இலங்கை வானொலி பிறை எப்.எம்.சேவையில் தினமும் ஒலிபரப்பாகி வரும் 'செய்தி மஞ்சரி' எனும் நிகழ்ச்சியின் பிதா மகனாக இவர் போற்றப்பட்டு வருகின்றார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பல்வேறான செய்திகளை முந்திக் கொண்டு வழங்குவதில் வல்லவராய் இவர் திகழ்கின்றார். உள்ளுர், தேசிய மற்றும் சர்வதேச செய்திகள், நடப்பு விவகாரங்கள், விளையாட்டு, கலை, கலாசராம், பாரம்பரியம், பண்பாட்டு விழுமியம், முன்னோர் அனுபவம் போன்ற பல்வேறு விடயங்களை ஒன்று திரட்டி காலை வேளையில் மக்களுக்காக பயனுள்ள வகையில் இவர் தொகுத்து வழங்கி வருவது எல்லோர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது எனலாம்.
இளயோரை அன்பு கொண்டு வழிப்படுத்துவது, திறமையானோரை ஊக்குவித்து வளப்படுத்துவது, துறைசார்ந்தோரை மதித்து செயற்படுவது, எல்லோரையும் தட்டிக் கொடுத்து களம் கொடுக்கும் வளம் கொண்ட குரல் கொண்ட இவரின் சேவைக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வித்தகர் விருது வழங்குவதானது எல்லோராலும் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours