(சுமன்)


கிழக்குப் பல்கலைக்கழக பல்துறை ஆராய்ச்சிக்கான நிலையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த "நாளைய சவால்களுக்கான நிலைத்திருக்கும் தன்மை, புத்தாக்கம், இடைநிலை ஆராய்ச்சி" என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு புதன்கிழமை (24) கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. 

கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.ஜி.ஜோன்பிள்ளை தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவரும் றுகுணு பல்கலைக்கழக பயிர் விஞ்ஞானத்துறையைச் சேர்ந்த வாழ்நாள் பேராசியருமான ரஞ்சித் சேனாரத்ன, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகத்தின் நிறுவுனரும் அதன் தவிசாளருமான கலாநிதி. ஜே.பானுசந்தர், மட்டக்களப்பு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி. ஜே.ஜே.முரளிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் முக்கிய பேச்சாளர்களாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசியர். கலாநிதி வி.சர்மிளா, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் நாகா சுப்ரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இயற்கை மருத்துவ நிபுணரும் ஊட்டச்சத்து தொடர்பான அறிவுரையாளருமான வைத்தியர் நித்தி கனரத்னம் நிகழ்நிலை ஊடாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

"நாட்டின் பிரச்சினைகளுக்கு அறிவியல் மூலம் தீர்வு காணப்படும். எனவே, தேசிய விஞ்ஞான மன்றமும், இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கமும் பல்துறை துறையில் உள்ள கல்வியாளர்களுடன் கைகோர்த்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்குத் தயாராக உள்ளதாக" தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவரும் றுகுணு பல்கலைக்கழக பயிர் விஞ்ஞானத்துறையைச் சேர்ந்த வாழ்நாள் பேராசியருமான ரஞ்சித் சேனாரத்ன கூறினார்.

இம்மாநாட்டுக்காக இலங்கை, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து 162 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்துடன், அவற்றில் 138 கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours