-----------

 (எம்.என்.எம்.அப்ராஸ்) 


சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிகுந்த சிரமத்துடன் சுத்தப்படுத்தும் ஊழியர்களுடன் உபவேந்தர் உள்ளிட்ட குழுவினரும் இணைந்து சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

 சீரற்ற காலநிலை மற்றும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெள்ளநீர் புகுந்ததன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22.01.2024 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள அதேவேளை பல்கலைக்கழகத்துக்குள் அவசர நிலையை பிரகடனப்படுத்தி சகல தரப்பு ஊழியர்களின் ஒத்துழைப்புடன் வளாகத்தில் முழுமையாக சுத்திகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்,அரபு மற்றும் இஸ்லாமிய பீடத்தின் பீடாதிபதி எம்.எச்.ஏ. முனாஸ், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா எம்.ஜி.எச்.,பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, வேலைப்பகுதி பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில், மற்றும் பேராசிரியர்கள் கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் எம்.ரீ.எம். தாஜுதீன். செயலாளர் எம்.எம்.முஹம்மட் காமில் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.

தற்போது பல்கலைக்கழகத்துக்குள் இருந்த வெள்ளம் வடிந்துள்ள நிலையில் தாழ்வான சில இடங்களில் தற்போதும் நீர் தங்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது. 


 ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பல்கலைக்கழகத்தின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் காரணமாக பாரிய சொத்து இழப்புக்களை ஊழியர்களின் மேலான ஒத்துழைப்புடன் குறைக்க கூடியதாக இருந்ததாக உபவேந்தர் குறிப்பிட்டார். 

 மேலும், தங்களது சக்திக்கு மேலதிகமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டால் கையாளவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் கருத்து வெளியிட்டார்.

அத்துடன், சேதங்கள், மீள் கட்டுமானம் மற்றும் எதிர்கால அனர்த்த தவிர்ப்பு திட்டவரைபுகள் தொடர்பிலும் விரைவில் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சுத்திகரிப்பு பணிகளில் மிகுந்த சிரத்தையுடன் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours