சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரே அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினரின் ஆலோசனைக்கு அமைவாக உபவேந்தர், ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று கூடிய பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினரின் நீண்ட ஆலோசனைக்களுக்கு அமைவாக கல்வி நடவடிக்கைகளை மேலும் நீடித்து எதிர்வரும் 22.01.2024 வரை அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அனர்த்தம் ஏற்படலாம் என சந்தேகித்த இடங்களில் இருந்த அகற்றக்கூடிய அனைத்து பொருட்களையும் தஸ்தாவேஜுகளையும் பல்கலைக்கழக அனர்த்த முகாமைத்துவ குழுவில் கண்காணிப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்.
இருந்தபோதும் தொடரான மழையின் காரணமாக ஏற்பட்ட அவசரகால வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக எதிர்பாராத சில பிரதேசங்களையும் வெள்ளம் ஆக்கிரமித்திருந்தது. இவ்வாறான சூழலில் பல்கலைக்கழகத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினரின் கண்காணிப்பின் கீழ், எஞ்சிய மீட்க்கப்பட வேண்டிய இடங்களில் இருந்த ஆவணங்களையும் பல்கலைக்கழக சொத்துக்களையும் பாதுகாக்கும் அகற்றும் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக ஊழியர்கள் ஈடுபட்டடதாக தெரிவித்தார். பல்கலைக்கழக ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த அதேவேளை முப்படையினரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
இன்றைய நிலவரப்படி வெள்ளம் படிப்படியாக வடிந்து வருவதாகவும் இவ்வாறான சூழல் நீடிக்குமாக இருந்தால் பல்கலைக்கழக வளாகத்தை சுத்தம்செய்து மிக விரைவில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கமுடியும் என்றும் வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டால் கையாளவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவைகள் தொடர்பில் விரைவில் அறிவிக்கமுடியும் என்றும் மீட்புப்பணிகளில் மிகுந்த சிரத்தையுடன் செயற்ப்பட்ட பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய முப்படையினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours