(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பின் வெள்ள அனர்த்த நிலவரங்களை அறிய அரசாங்க அதிபர் களத்தில்!!
மட்டக்களப்பு
மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி.ஜே.ஜே.முரளீதரன் இன்று (02) நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் காந்தி காராமம், கூளாவடி, வனத்த
அந்தோனியார் கோயில் வீதி, கூழாவடி, இருதயபுரம், மஞ்சந்தொடுவாய் உள்ளிட்ட
பகுதிகளில் வெள்ளி நீரினால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று
பார்வையிட்டதுடன் தேங்கியுள்ள வெள்ள நீரினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை
உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளை கட்டளையிட்டார்.
இவ்வேளை நீரினை
அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு,
மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனைப் பற்று பிரதேச செயலகம் என்பன இணைந்த
முன்னெடுத்தன.
இதனையடுத்து நாவற்குடா பிரதேசத்தில் வெள்ள
அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள
மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உடனடித் தேவைகளைப்
பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபரினால் பணிப்புரை வழங்கப்பட்டது.
மேலும்
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டதுடன் அவ்வாறு பாதிக்கப்பட்டு
நலன்புரி நிலையங்களுக்கு வருகைதர முடியாமல் தமது வீடுகளிலே தங்கியிருக்கும்
மக்களுக்கு ஹைறாத் பள்ளி வாயல் நிருவாகத்தினால் சமைத்த உணவு வழங்கப்படும்
நிகழ்விலும் அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது.
இக்கள விஜயத்தின்போது அனர்த்த முகாமைத்துவ நிலைய
அதிகாரிகள், மண்முனைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எம்.சியாஹூல்ஹக்,
காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், கிராம சேவை
உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை
அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி வ.ஜீவானந்தன்
உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours