திருவருள் சங்கத்தின் 84 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரமாகிறது.
1940 - 2024

கிழக்கிலங்கைப் பிரதேசங்களிலே இந்து சமய மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்ட சூழல்கள் பல்பரிமாணமானவை. 15.11.1930, 01.09.1932 ஆகிய இரு நாட்களிலும் சுவாமி சர்வானந்தர், சிவானந்த மகாவித்தியாலயத்திற்கு வருகை தந்துள்ளார். சுவாமி சர்வானந்தரின் இலங்கை விஜயங்கள் இலங்கையில் இந்து சமய நிறுவனங்கள் தோன்றும் சூழலை உருவாக்கின சுவாமி சர்வானந்தர் மட்டக்களப்பிற்கு 1918 ஆம் ஆண்டு வருகைதந்தார். அவ்வேளையில் இந்துக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருந்தனர். சொற்பொழிவுகள் நடாத்தப்பட்டன. அப்போது இந்துக்களிடையே விழிப்பு நிலை காணப்பட்டது. 1925ஆம் ஆண்டே மட்டக்களப்பில் இராமகிருஷ்ணமிசன் பணிகள் ஆரம்பமாகின. இந்துக்கல்வி பாரம்பரியத்தை பரப்புவதையே இராமகிருஷ்ணமிசன் பிரதான பணியாகக் கொண்டிருந்தது. 1915ஆம் ஆண்டில் மட்டக்களப்புப் பிரதேச மக்களால் விவேகானந்தர் ஜனனதினம் கொண்டாடப்பட்டது. (ஆதாரம் இந்து சாசனப் பத்திரிகை). இலங்கைக்கு விவேகானந்தரது வருகையே கொழும்பு, கிழக்கு இலங்கை மக்களிடையே சமய விழிப்புணர்வுகள் ஏற்படக்காரணமாயிற்று. 1925இல் விவேகானந்த சபையினால் விவேகானந்தர் எனும் சஞ்சிகையும் இந்துப் பாடசாலையும் அமைக்கப்பட்டது. நூலாசிரியராகவும் பாடசாலை ஸ்தாபகராகவும் சுவாமி விபுலானந்தர் விளங்கினார்.

இதே காலகட்டத்தில் வடக்குப் பகுதியிலும் கொழும்பு, மலையகப் பகுதியிலும் இந்து வித்தியாவிருத்திச் சங்கம் இந்துப் பாடசாலைகளை நிறுவி சமயக் கல்விக்கும் இந்துசமயப் பாதுகாப்பிற்கும் பங்களிப்புச் செய்தது. இந்து வித்தியா அபிவிருத்திச் சங்கம், "இந்துப்போட்" இராஜரெத்தினத்தால் உருவாக்கப்பட்டது. அதுபோல் கிழக்கிலங்கையில் இராமகிருஷ்ண மிஷனுடைய சமயப்பங்களிப்பே கூடுதலாகக் காணப்பட்டது. கிழக்கிலங்கையில் இந்து நிறுவனங்கள் தோன்றிப் பரவிய சூழலைப்பற்றி களுவாஞ்சிகுடி சைவ மகாசபையின் வைரவிழாமலர் பின்வருமாறு கூறுகிறது.

“திருக்கோணேஸ்வர கோயிலில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோணோப் பெருமானின் திருவுருவச்சிலை கிழக்கிலங்கையில் ஆன்மீக எழுச்சியுடன் பவனி வகும்போது சைவம் காக்கும் களுவாஞ்சிகுடி மக்களும் அந்திருவுருவச் சிலையை தரிசிக்கும் வாய்ப்பை 1952ஆம் ஆண்டுகளிலே பெற்றனர். இதனால் எழுச்சியுற்ற இளைஞர்கள் ஒன்றிணைந்து சமய எழுசரியை ஏற்படுத்தும் முகமாக “களுவாஞ்சிகுடி சைவ மகாசபையை" உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் 19:48 களில் ஆங்கிலேயர் பிடியிலிருந்து பொதுமகள் விடுபட்டதைத் தொடர்ந்து இவ்வாறான நிறுவனங்கள் தோன்றுமி வாய்ப்பு ஏற்பட்டிருந்தமையை அவதானிக்கலாம் அதுமட்டுமல்ல இந்துசமய விருத்தி இந்துசமய விழிப்பு என்பவற்றில் ஈடுபாடுடைய சமுக அமைப்பாக இம் மன்றங்கள் உருவாக்கப் பட்டமையும் நோக்க முடிகின்றது.

சுதந்திர காலத்திற்கு முற்பட்ட கால மட்டக்களப்பின் சமய சமூக அமைப்பின் வரலாற்றை தொன்மங்களின் அடிப்படையில் நோக்கும்போது 1920ஆம் ஆண்டினைத் தொடர்ந்து தமிழகத் தொடர்புகள் வலுவடைந்திருப்பதை காண முடிகிறது. சுவாமி விபுலானந்தரின் பணிகள் தமிழக மட்டக்களப்பு தொடர்பை வலியுறுத்தும் அடிப்படையில் விளங்குகின்றன. இந்த சூழலில் தென்னிந்தியாவின் திண்டுக்கல் எனும் இடத்திலிருந்து வருகைதந்து செட்டிபாளையம், குருக்கள்மடம் ஆகிய கிராமங்களில் ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜீ அவர்கள் 1940 களில் திருவருள் சங்கத்தைத் தாபித்தார். ஆரம்பகாலத்தில் ஐக்கிய வாலியர் சங்கமாக இம்மன்றம் அமைத்திருந்தது. சுவாமிஜீ அவர்கள் இத்தகைய திருவருள் வாலிப சங்கங்களை குருக்கள்மடம் செட்டிபாளையம் மக்களிடையே தோற்றுவிக்க இருந்த சமய சமூக அரசியல் பின்னணி மேலும் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும்.

1940களின் முன்பு கிழக்கிலங்கை கிராம மக்களிடையே இந்து நிறுவனங்களோ கலைக்கழகங்களோ செயற்பட்டமை குறைவாகும். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் கிறிஸ்தவ சமாசங்கங்களே மேலோங்கிக் காணப்பட்ட அதனைத் தொடர்ந்து குல அமைப்புகளே நிறுவன அமைப்புகளாக விளங்கலாயின அத்தகைய குல அமைப்புகளிடையே ஐக்கிய நிலையை ஏற்படுத்தி சமூக கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவே ஐக்கிய வாலிபசங்க அமைப்பு உருவாக்கம் பெற்றது. முற்றிலும் சமய ரீதியான நோக்குடனும் சமுதாய் விழிப்புணர்வுடனும் அதேவேளை மரபுவழிக்கல்வி கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடனும் திருவருள் சங்கம் செயற்படத்தொடங்கியது.

1930 களில் மட்டக்களப்பு மாவட்ட கரையோரக் கிராமங்களில் மாந்திரீகத்தை மையமாகக் கொண்ட குழுக்கள் செயற்பட்டு வந்திருப்பதளை தொன்மச் செய்திகளின் மூலம் அறியலாம் மாந்திரீக அறிவை நன்மைக்காகப் பயன்படுத்தும் குழுவினரும், மாந்திரீக அறிவில் தீய செயல்களுக்கு பயன்படுத்தும் குழுவினரும் செயற்பட்டனர். ஆயர்வேத வைத்தியம், விஷக்கடி வைத்தியம் மாட்டு வைத்தியம், சோதிடம் எனும் குழுவினர் செயற்பட்டனர். இத்தகைய விட யங்களுடன் கூத்துக் கலைஞர் குழுக்களும் காணப்பட்டனர். அவர்களில் பூசகர் மரபினர் காவியக் கலைஞர்கள் ஆகியோரும் இணைந்திருந்தனர். பூசகர் மரபில் பல்வகைப் பிரிவினர் காணப்பட்டனர். ஆடியும் பாடியும் இறைவழிபாடு செய்யும் நிலை காணப்பட்டது. புராணக்கதைகளை அடிப்படையாகக் கொன் ஆடல்களுடன்; கொம்புமுறி, மகிடிக்கூத்து, பறைமேளக் கூத்து, என்பனவும் சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. மேற்கூறிய தொன்மைக் கல்வி மரபில் ஒரு கட்டுடைப்பு செய்யும் முயற்சியாகவே திருவருள் சங்கத்தின் தோற்றமும் செயற்பாடுகளும் அமைந்தன. தொன்மையான கிராமிய வழிபாட்டிற்கும் ஆகம் வழிபாட்டிற்கும் இடைப்பட்ட ஒரு மென்பத்தி முறையை அறிமுகம் செய்தவாறே திருவருள் சங்க நடவடிக்கைகள் செயற்படத் தொடங்கின. அண்மைக்காலத்திலே மரபும் மாற்றமும் என்னும் சிந்தனை பிரதான இடம் பெறுவதை நோக்க முடிகின்றது. கல்வித்துறையிலும் இத்தகைய மரபும் மாற்றமும் அவதானிக்கப் படுகின்றது. அதன் முன்னோடி விடயமாகவும் திருவருள் சங்கத்தின் பணிகள் அமையலாயிற்று. கண்ணகி வழிபாடு, மாரியம்மன் வழிபாடு, முருக வழிபாடு, வைரவ வழிபாடு, நாகதம்பிரான் வழிபாடு என்பவை சமுதாயத்தில் செல்வாக்கடைந்திருந்த சூழலில், சிவ வழிபாட்டையும், திருமால் வழியாட்டையும் பிரதித்தாபனம் செய்யும் சமயச் சார்பான நிறுவனமூடாக வழிபாட்டைப் பரப்பும் நிலை ஏற்பட்டது. செட்டிபாளையம் கிராமத்தில் ஆரம்பத்தில் கங்காணியார் குடும்ப இல்லத்தில் ஐக்கிய வாலிபர் சங்கம் அங்குரார்ப்பணமாகியது.

சிவாலயம் ஒன்றை அமைக்க வேண்டுமென்ற தீர்மானமும் சுவாமி அவர்களால் முன்வைக்கப்பட அக்கிராசனர் கந்தையா அவர்களது தாயதி முதுசமான காணி சிவாலய ஸ்தாபிப்புக்காக அன்பளிப்புச் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே திருவருள் சங்கத்திற்கான மடமும் ஆலயமும் அமைக்கப்பட்டது. திருவருள் சங்கம் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து சமயம் சார்பான நிறுவன அமைப்புக்கள் குறைவாகவே காணப்பட்டன. பெரும்பாலும் இல்லை என்றே குறிப்பிடலாம். இராமகிருஷ்ண சங்கமே சமயக் கலவிக்கும் பஜனை பிரார்த்தனைக்குரிய சமாசமாக தொழிற்பட்டது. 1952ஆம் ஆண்டிலேயே மட்டக்களப்பு இந்துசமய விருத்திச் சங்கமும் எஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு முன்பே சற்சங்கம் எனும் பெயரில் சைவப்புலவரும் தேசிகருமாகிய திரு.கா.அருணாச்சல தேசிகர் உருவாக்கிய சற்சங்கமே இந்துசமய விருத்திச் சங்கத்திற்கு முன்னோடியாகியது. சைவப்புலவர் அருணாச்சல தேசிகரும், சுவாமி விபுலானந்தரும் ஆத்மீக ரீதியான சந்திப்புக்களை நடாத்தியதை தொடர்ந்து 1948ல் சற்சங்கம் என்னும் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

இத்தகைய சந்திப்புக்கள் மட்/ஆனைப்பந்தி இராமகிருஷ்ன மிசன் பாடசாலையில் இடம்பெற்றன. மட்டக்களப்பு இந்து சமய விருத்திச்சங்கம் 1952ல் ஆரம்பித்து செயற்பட்டதைத் தொடர்ந்து 1959ல் குருக்கள்மடம் இந்துசமய விருத்திச் சங்கம் ஆரம்பமானது. இதன் முன்னோடி ஸ்தாபகராக புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை விளங்கினார். அதனைத் தொடர்ந்து 1968ல் மட்டக்களப்பு இந்து இளைஞர்மன்றம் ஆரம்பமானது. இம்மன்றம் 1993ல் தனது வெள்ளி விழாவை கொண்டாடியது. இவ்வாறு பிரதான சமய நிறுவனங்களை அவதானிக்கும்போது திருவருள்சங்க செயற்பாடுகள் கிராமியச் சூழவில் இன்றுவரை செல்வாக்குப் பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

மேற்கூறிய பிரதான சமய நிறுவனங்களுக்கு முன்பே 1940 திருவருள் சங்கம் தோன்றியமைக்கு கிராமிய மக்களிடையே காணப்பட்ட சைவசமயப்பற்றே காரணமாகும். அத்துடன் ஐரோப்பிய கலாசார பிடியிலிருந்து தமது சுய தொன்மக் கலாசாரத்தையும் பேணவேண்டும் என்னும் விழிப்பும் இதற்கு அடிப்படையாக அமைந்தது. அதேவேளை தேவார திருவாசக தோத்திரங்களை பண்ணிசை பாராயணம் செய்து இன்றவனை வழிபட வேண்டும் என்னும் அடிப்படைப் பக்தி நெறியை சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜி அவர்கள் எமது கிராமத்தில் ஆன்மீக விதையாக பரப்பியிருந்தார். திட்சை பெறுதல் வீட்டில் தேவாரபாராயணம் ஓதுதல், நியானம் செய்தல், சிவசின்னம் அணிதல், பஞ்சாட்சர செபம் செய்தல் என்னும் சமுதாய ஒழுங்கு விதிகளுடன் கூடிய சமய சாதனைகளையே சுவாமிஜி அவர்கள் முதலில் போதித்தார்கள். இத்தகைய சமய சாதனைகளுக்குரிய இடமாகவே செட்டிபாளையம் சிவனாலயம் இக்கிராம மக்களின் ஆதரவுடன் அமையத்தொடங்கியது. அதுபோலவே குருக்கள்மடம் கண்னான் கோயிலும் அதே காலத்தில் அமைக்கப்படலாயிற்று, இவ்வூரின் சமயசாரமான பக்தர்களே ஆரம்பத்தில் பூசகர்களாக நியமிக்கப்பட்டனர், மந்திரம் சொல்லுதலோ, கட்டுச் சொல்லுதலோ, சாமியாட்டமோ இவ்வாலயங்களில் அறிமுகமாகவில்லை, அதேவேளை ஆகம முறையான ஆலய அமைப்பும் ஆரம்பத்தில் காணப்பட்டிருக்கவில்லை. ஆரம்பத்தில் மடத்துக் கோயில் என்று அழைக்கப்பட்டது. அவ்வாறு அமைந்த மடத்துக் கோயிலில் நடந்த அனுஸ்டானங்கள் எவை 

தேவாரப்பாராயணத்தை இறைவனுக்கு நிவேதனம் செய்வதே சங்கத்தின் பிரதான அம்சமாகும்.

தேவாரப்பாடல்களை தனித்தனியாக ஒப்புவித்தல் 

தேவாரப் பாடல்களை கூட்டமாக பராயணம் செய்தல்

 ஆண்கள் பெண்கள் இணைந்து பாடுதல் புதிய திருமுறைப்பாடல்களை வாலிபர்களுக்கு அறிமுகம் செய்தல்

 கூட்டுப்பிரார்த்தனை அறிமுகம் . .

விரத அனுஸ்டான முறைமைகள் விரத காலப்பராயணங்கள் அறிமுகம்

திருவருள் ஆண்கள் சங்கம், திருவருள் பெண்கள் சங்க ஆண்டு. இசைப்போட்டிகள். 

பிடியரிசித் திட்டம், சமூக ஒருமைப்பாடு

விழாக்களில் சமயரீதியான பேச்சுப்போட்டிகள் தேவார இசை போட்டிகள்

அறச்செயல்களில் ஈடுபடல்

கல்வி ஊட்டல் 

பொதுப் பணிகளில் ஈடுபடல்

ஒழுக்கப்பண்பு விருத்திகள்

2013 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து திருவருள் சங்கமானது பல்வேறு பரிணாமங்களில் தனியான அமைப்புகளை உருவாக்கி அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப சட்ட ரீதியாக பதிவுகளை மேற்கொண்டு தனது பணி வீச்சினை மேலும் விஸ்திரணம் அடைவதற்கு வழிகோலியுள்ளது.
குறிப்பாக சிவன் முன் பள்ளி பாலர் பாடசாலை, திருவருள் சமூக மேம்பாட்டு அமைப்பு, திருவருள் நுண்கலை மன்றம், திருவருள் சகவாழ்வு சங்கம்,  திருவருள் பக்தி இயக்கம் திருவருள் கல்வி அபிவிருத்திச் சேவை முதலானவற்றிற்கு தனியான இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இப்பிரதேசம் மாவட்டம் சார்ந்து பல்வேறு வேலை திட்டங்களை திசைமுகப்படுத்தி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

84வது ஆண்டு விழாவினை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் இவற்றை பதிவிடுவதில் மன நிறைவடைகின்றோம்.

பெ.பேரின்பராசா 
( ஓய்வுநிலை ஆசிரியர்) செட்டிபாளையம்

ம. புவிதரன்
செட்டிபாளையம்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours