நூருல் ஹுதா உமர் 

பொருளாதார நெருக்கடி மிக்க இக்கட்டான சூழ்நிலையில் அரச ஊழியர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தெரிவித்தார்.

பலநோக்கு அபிவிருத்தி செயலணி திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு இன்று (21) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பயிற்சிக் கருத்தரங்கு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார சேவையினைப் பொறுத்தவரையில் சுகாதார ஊழியர்களின் பணி மிகப் பிரதானமானது. கடந்த காலங்களில் நீங்கள் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் ஏதோ ஒரு அடிப்படையில் சுகாதார சேவையில் இணைக்கப்பட்டுள்ளீர்கள். இது மிகவும் பெறுமதியான தொழிலாகும்.

பொருளாதார நெருக்கடிமிக்க சூழ்நிலையில்தான் அரசாங்கம் இவ்வாறானதொரு நியமனத்தினை வழங்கியது என்பதனை இங்குள்ள சகலரும் நினைவில்கொள்ள வேண்டும். அந்தவகையில் சுகாதார சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட நாம் பொறுப்புடன் செயற்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும்.

சுகாதாரத்துறையானது ஒரு சேவை என்பதனை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக சுகாதார நிறுவனங்களில் பணியாற்றுகின்றவர்கள் கடமைக்கு மேலதிகமாகவும் சேவையாற்றுகின்றனர். எனவே பலநோக்கு அபிவிருத்தி செயலணி திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு சுகாதார நிறுவனங்களில் பணியாற்றுகின்றவர்களும் கிடைத்த சந்தர்ப்பத்தினை பெரும் பாக்கியமாகக்கொண்டு நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன்கருதி சேவையாற்ற வேண்டும் என்றார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours