(அஸ்லம் எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர சேவைகள் துறைசார் திணைக்களங்களின் ஒருங்கிணைப்பு மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (07) கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இம்மீளாய்வு கூட்டத்தில் கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் முன்னெடுக்கப்படும் சேவைகளின் போது எதிர்நோக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு, சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் ஊடாக அவற்றுக்கு தீர்வுகள் காண்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்ற போது
பிரதேச செயலகங்கள், பொலிஸ் நிலையங்கள், சுகாதார வைத்திய பணிமனைகள், அதிகாரி மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை என்பவற்றுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து இவ்வாறு கலந்துரையாடப்பட்டு, தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம். ஆஷிக் ஆகியோருடன் மேற்படி அரச நிறுவனங்களின் பிராந்திய அலுவலகங்களின் பிரதிநிதிகள், பொறியியலாளர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours