மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் வே.ஈஸ்பரன் கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார். 

மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன்மடுவை பிறப்பிடமாக கொண்ட வே.ஈஸ்பரன் ஆரம்ப கல்வியை பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும், இடை நிலைக் கல்வியை அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர்  பாடசாலையிலும், உயர் கல்வியை மெதடிஸ்த மத்திய கல்லூரியில் விவசாய விஞ்ஞான துறையில் கல்வி கற்ற இவர் ஒரு பட்டதாரி ஆவார்.

பாடசாலை காலங்களில் மெய்வல்லுனர் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். தனது இளமைக் காலத்தில் முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் கால்பந்தாட்ட வீரனாக உள்ளூர் செவணசைட் கால்பந்துப் போட்டிகளில் பிரகாசித்த இவர் தனது கால்பந்தாட்டத் திறன் காரணமாக மட்டக்களப்பின் பாடுமீன் பொழுதுபோக்குக் கழகத்தின் முன்னிலை வீரராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

பாடுமீன் பொழுது போக்குக் கழகத்தின் கால்பந்தாட்ட A அணியின் முதல் பதினொரு வீரர்களில் ஒருவராக திகழ்ந்ததுடன், சிறந்த கால்பந்தாட்ட வீரனாகத் தன்னை இனங்காட்டிய இவர் 1990 களின் பிற்பட்ட காலப்பகுதியில் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக அரச சேவையில் இணைந்து செயலாற்றியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இளந்தலைமுறையினரின் விளையாட்டை விருத்தி செய்யும் சேவையில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு கடமையாற்றிய இவர் குறிப்பாக கிராமப் புற பகுதிகளில் விளையாட்டு துறையை மேம்படுத்த அயராது பாடுபட்டுள்ளார்.

விளையாட்டு உத்தியோகத்தராகச் சேவையாற்றிய காலத்தில் விளையாட்டுடன் இணைந்த கற்கைகள் பலவற்றிலும் பங்குபற்றித் தனது தொழில் வாண்மையை மேலும் வலுப்படுத்தியுள்ள இவர் அம்பாரை மாவட்ட செயலகத்தில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றியதுடன், குறித்த கால கட்டத்தில் நீண்ட இடைவெளியின் பின்னர் அம்பாரை மாவட்டம் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடம் வகித்தமைக்கும், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல விளையாட்டு வீரர்கள் சாதனையினை நிலைநாட்டியமைக்கும் இவர் பக்க பலமாக செயலாற்றியுள்ளமையும் விசேட அம்சமாகும்.

மட்டக்களப்பில் நீச்சல், ஹொக்கி மற்றும் கடற்கரை விளையாட்டுக்கள் போன்றவற்றை முதல் முதலாக அறிமுகப்படுத்தி அவற்றை மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்ததில் முன்னின்று செயற்பட்டவராகவும், மட்டக்களப்பு மாவட்ட கடினப் பந்து சங்கத்தினை தலைமை தாங்கி  ஆரம்பித்து வைத்ததுடன், இவற்றிற்கெல்லாம் ஆலோசகராகவும் செயற்பட்டு பல்வேறு வகைகளில் பணியாற்றி மாவட்டத்தின் பல்வேறு விளையாட்டுக்களும் அபிவிருத்திபெறத் தனது காத்திரமான பங்களிப்பை வழங்கிவருகிறார்.

தனது சேவைக் காலத்தில் மாவட்ட விளையாட்டுப் பயிற்றுனராக, மாவட்ட விளையாட்டு அதிகாரியாக பதவி உயர்வுகளைப் பெற்ற இவர் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆசிய மட்ட B தர (லைசன்ஸ்) உதைப்பந்தாட்ட பயிற்றுனராக முதல் முதலாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய மட்ட இளையோர் மெய்வல்லுனர் போட்டிகளில் நடுவராக கடமையாற்றிய இவர் இந்தியாவில் பங்கலூர் நகரில் அமைந்துள்ள இந்திய விளையாட்டு துறை (SAI) நிறுவனத்தில் உதைப்பந்தாட்ட பயிற்சி நெறியில் கலந்து கொண்டு A தரத்தில் சித்தி பெற்ற இவர், இந்தியா கேரள மாநிலத்தில் லக்ஸ்மி பாய் கல்விக் கல்லூரியில் மெய்வல்லுனர் பயிற்சி நெறியில் கலந்து B தரத்தில் சித்தி பெற்றுள்ளார். அதே போன்று இந்தியாவின் அஷாம் மானிலத்தில் இடம் பெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் விளையாட்டு மேற்பார்வையாளராகவும் பங்கேற்றுள்ளார்.

அத்தோடு சிறந்த எழுத்தாற்றல் மிக்க இவர் "கால்பந்தாட்ட விதிமுறைகள்" எனும் நூலைத் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளதுடன், ஆளுமைமிக்க நிகழ்ச்சி மேற்பார்வையாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் செயலாற்றி வரும் நிலையில் இவருக்கு குறித்த நியமனம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours