கிழக்கு மாகாணத்தின் அனைத்து உயர்மட்ட விடயங்களையும் கையாளும் அதிகாரிகளாக முஸ்லீம் அதிகாரிகள் இருக்கும் போது ஒருசில முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனரீதியாக ஆளுநர் மீது வீண்பழி சுமத்துவது கண்டிக்கத் தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் உயர்பதவிகளில் முஸ்லீம் அதிகாரிகள் இல்லை என்ற வையில் கருத்துகளை முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கின்றமை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்திலே மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழர் ஒருவர் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட வரலாறு இருந்திருக்கவில்லை.
தற்போது தான் செந்தில் தொண்டமான் அவர்கள் ஆளுநராக வந்திருக்கின்றார். அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து அமைச்சராக இருந்த காபீஸ் நசீர் அவர்கள் அவருக்கெதிராக இனரீதியான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
தற்போதும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷறப் மற்றும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூப் ஆகியோரும் இவ்வாறாகவே பேசி இருக்கின்றார்கள்.
முஸ்லீம் நிர்வாக அதிகாரிகள் கிழக்கு மாகாணத்திலே அதாவது அமைச்சுகளின் செயலாளர்களாக இல்லை என்பதும், ஆளுநர் ஒருதலைப் பட்சமாக சிங்களவர்களையும் தமிழர்களையும் அப்பதவிகளுக்கு நியமித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இவர்களின் கூற்றுக்கள் யாவும் சிறுபிள்ளைத் தனமாகவும், இனரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் முகமாகவும், தமிழராக இருக்கும் செந்தில் தொண்டமான் அவர்களை இந்த ஆளுநர் பதவியில் இருந்து விலத்திவிட்டு ஏனைய இனத்தைச் சேர்ந்தவர்களை தங்களுக்குச் சாதகமான ஒருவரைக் கொண்டு வருவதற்காக இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதாகவுமே இருக்கின்றது.
ஆளுநர் செந்தில் தொண்டமானைப் பொருத்தமட்டில் இந்த மாகாணத்திலே மூவின மக்களுக்கும் நியாயமான ஒரு சேவையை வழங்குகின்றார். இதனைப் பொறுக்க முடியாமல் இஸ்லாமிய சகோதர பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.
ஏனெனில் கிழக்கு மாகணத்தைப் பொருத்தவரையில் தற்போதைய நிலையில் நிருவாக ரீதியாக முஸ்லீம் அதிகாரிகளின் ஆதிக்கமே அதிகம் இருக்கின்றது.
ஏனெனில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் நிருவாகம், கிழக்கு மாகாணத்தின் நிருவாகத்தைக் கொண்டு நடத்துபவர் நசீர் என்னும் ஒரு முஸ்லீம் நண்பர். அதேபோன்று மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக இருப்பவர் சகோதரர் மன்சூர் அவர்கள். அதேபோன்று பிரதிப் பிரதம செயலாளர் நிதி, மாகாண நிதியைக் கையாள்பவரும் ஒரு முஸ்லீம் சகோதர அதிகாரியே. அதற்கும் மேலாக கணக்காய்வாளர் நாயகமாக ஒரு முஸ்லீம் அதிகாரியே இருக்கின்றார்.
குறிப்பாகச் சொல்லப்போனால் தற்போது கிழக்கு மாகாணத்திலே ஒரு இடம்மாற்றம், நியமனம், பதவியுயர்வு, மாகாணத்தின் ஒட்டுமொத்த நிதியையும் கையாள்வது, கணக்காய்வினை மேற்கொள்வது, என நிருவாக ரீதியில் முஸ்லீம் சகோதரர்கள் அதிகாரிகளாக இருக்கும் போது அமைச்சுகளின் செயலாளர்கள் என்ற ரீதியில் மாத்திரமே முஸ்லீம் சகோதரர்கள் இல்லை. இந்த நிலையில் இனரீதியாக இவர்கள் பேசுவதென்பது செந்தில் தொண்டமானுக்கு எதிரான ஒரு கருத்தாகவே நான் பார்க்கின்றேன்.
செந்தில் தொண்டமான் அவர்கள் மலையகத்திலே மூவின மக்களுடனும் நெருங்கிப் பழகியவர். அதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் மூவின மக்களுடன் ஒருநடுநிலையான சேவையைச் செய்து கொண்டிருப்பவர் மீது வீண்பழி சுமத்தும் இவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours