(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


முன்னாள் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். இப்ராஹீம் (கபூரீ) ஹழ்ரத் (ரஹ்) மறைவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பெரும் சோகத்தையும் நிரப்ப முடியாத வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளதென அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எல். நாஸிர்கனி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாவனெல்லை ஹெம்மாதகமையில் பிறந்த அவர், வளர்ந்த காலத்தில் இருந்து இஸ்லாமிய சன்மார்க்கப் பணியில் ஈடுபட்டவர். மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் ஆரம்பகாலத்தில் பயின்றவர். மௌலவி சம்சுதீன் ஹஸரத், மௌலவி உமர் ஹஸரத் போன்றவர்களிடம் பாடம் கற்றவர். அத்தோடு, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முற்போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இளைஞராக இருந்தவர். எதிர்காலத்தில் ஒரு தலைவராக நியமிக்கப்பட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறை விரிவுரையாளராக நீண்ட பல வருடங்கள் பணியாற்றி, பல மாணவர்களை பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து உருவாக்கினார். அத்தோடு, இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தூடாக ஜமாஅத்தே இஸ்லாமியை சிறப்பான முறையில் வழி நடத்தினார். 

எமது நாட்டின் பிரசித்தமான ஆளுமைகளுள் ஒருவருவரான இவர், மாவனெல்லை ஆஇஷா சித்தீக்கா அரபுக் கல்லூரியை பெண்களுக்காக 1995 களில் உருவாக்கி, பெண்கள் கல்வியை முற்போக்கானதாகவும் நவீனத்துவம் நிறைந்ததாகவும் மாற்றினார். அந்தப் பெண் அரபுக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி, நேர்சிங் அதேபோல பெண்களுக்கே உரித்தான திறன்கள், விருத்தி எல்லாவற்றையும் அவருடைய சிந்தனையின் அடிப்படையிலே உருவாக்கப்பட்டு இன்று மாவனெல்லை ஆஇஷா சித்தீக்கா ஒரு புகழ்பெற்ற, முதலிடம் வகிக்கக்கூடிய அரபுக் கல்லூரியாக பெண்களுக்கு இயங்கி வருகின்றது.

அதேபோல் இந்த நாட்டிலே சிங்கள மொழி மூலம் தஃவா சென்றடைய வேண்டும். சிங்கள மக்களுக்கு இஸ்லாம் சரியாக விளங்க வேண்டும் என்பதற்காக அவர் தன்வீர் அகடமியை திஹாரியிலே உருவாக்கினார்.

இன்று திஹாரிய தன்வீர் அகடமி மிகச் சிறப்பான பணிகளைச் செய்து இந்த நாட்டிலே சிங்களம் தெரிந்த உலமாக்கள் உருவாகி, குத்பாக்களையும் பயான்களையும் சிங்கள மொழியில் மேற்கொண்டு வருகின்றார்கள். அதேபோல் சிங்கள மொழியில் புத்தகங்களை உருவாக்கினார்.

அதேபோல் அல்ஹஸனாத் என்ற சஞ்சிகையில் முற்போக்கு எழுத்தாளராகவும் இருந்ததோடு, பல கல்வி நிறுவனங்களின் பங்காளியாகவும் செயலாற்றியவராவார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிலும் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் உபதலைவராகவும் இருந்து தனது சமூகப் பங்களிப்பை மேற்கொண்டுள்ளார்.

மேலும் அன்னார் நீண்ட காலமாக பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவற்றின் பங்காளியாகவிருந்து பல சமூகப் பணிகளிலும் - குறிப்பாக கல்விப் பணிகளில் பங்கு கொண்டு சேவையாற்றியுள்ளார் என்பது மட்டுமன்றி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிகமான மக்களது நன்மதிப்பைப் பெற்று உள்ளங்களில் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல இன்று கொழும்பு தெமடகொடையில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இஸ்லாமிக் புக் ஹவுஸ் அவருடைய சிந்தனையின் வெளிப்பாடாகவே அமைந்தது. அந்த புக் ஹவுஸுக்குச் சென்றால் நிறைய புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். இஸ்லாம் சார்ந்த சர்வதேச நாடுகளிலே வெளியான அத்தனை கிதாபுகளும் அரபு மொழியில், ஆங்கில மொழியில், சிங்கள மொழியில் பெறக்கூடிய வாய்ப்பை இஸ்லாமிக் புக் ஹவுஸ் செய்து கொண்டிருக்கிறது. அதற்கும் அவர் பங்களிப்புச் செய்தார்.

அவரின் மருமகனாக டாக்டர் றயிஸ் முஸ்தபாவைத் தேர்ந்தெடுத்தார். அவர் சிறுவர் நல, உள வைத்தியராகப் பணியாற்றி மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அவருடைய பிள்ளைகளும் சிறப்பாய் இயங்கி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கல்வி, சமய, சமூக, மேம்பாடுகள் அனைத்துக்கும் இப்ராஹிம் மௌலவி மிகச் சிறப்பான பங்களிப்புச் செய்து தனது 82 ஆவது வயதில் காலமாகி இருக்கிறார். 

அவர் மரணித்தாலும் அவருடைய சிந்தனை மரணிக்காது. அவர் விட்டுச் சென்ற கல்வி, தடையங்கள், சதக்கத்துல் ஜாரியாவாக அவருடைய கப்ருக்குச் சென்றடையும்.

தன் வாழ்நாளில் தீனுடைய சேவையில் தன்னை அர்ப்பணித்து விட்டு, தாருல் பகாவை அடைந்த ஹழ்ரத் அவர்களது அனைத்து நற்காரியங்களையும் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வதோடு, அவர்களது அனைத்து பிழைகளையும் மன்னித்து, வாழ்நாளில் புரிந்த அனைத்து நற்காரியங்களையும் ஏற்றுக் கொண்டு நாளை மறுமை நாளில் சாலிஹான மக்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக!

இந்த துயர் நிறைந்த சந்தர்ப்பத்தில் எமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது பேரிழப்பால் வேதனைப்படும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நேசர்கள் அனைவருக்கும் பொறுமையையும், ஆறுதலையும் பொறுமைக்கான நற்கூலிகளையும் வழங்குவானாக! ஆமீன்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours