பாண்டிருப்பை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்கள் தனது ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையிலேயே கல்வியினை தொடர்ந்தார். பின்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைத்துறையின் முதற் தொகுதி மாணவர்களில் மெய்யியல் துறையில் சிறப்புப்பட்டத்தினை வகுப்புச்சித்தியுடன் பெற்றவர். திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவினையும், மீண்டும் கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே முதல்தொகுதி மாணவராக முதுகல்வி மானி பட்டத்தையும் பெற்றார். 2011ல் இலங்கை கல்வி நிர்வாகசேவை(மட்டுப்படுத்தப்பட்டது) பரீட்சையில் அதிக புள்ளிகளுடன் சித்தியடைந்தும் அக்காலகட்டத்தில் நேர்முக பரீட்சையில் இவருக்கான நியமனம் கிடைக்கப்பெறாமை ஒரு துரதிஸ்டவசமானதே இருந்தும், பின்னர்
இவர் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் வழிகாட்டல் ஆலோசனை பாடத்தினுடைய வருகைதரு விரிவுரையாளராகவும், கற்பித்தல் பயிற்சியின் மேற்பார்வையாளரும், ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் வளவாளராகவும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான சிறுவர் கல்வி அபிவிருத்தி நிதியத்தின் போசகராகவும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இன்றுவரை செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்கள் பாடசாலையின் 87வருட கால வரலாற்றில் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் முதல் பெண் அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார். இவர் ஆசிரியர் தரம்-I வகுப்பைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் உன்னத சேவையினை பாராட்டி 2024.04.22 அன்று சம்மாந்துறை வலய நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரிய ஆலோசகர் மதிப்பிற்குரிய திரு.இ.குணசீலன் ஐயா தலைமையில் பிரதேசத்தின் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களால் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று வரலாற்றில் முதற்தடவையாக வித்தியாசமான முறையிலும் இயற்கைச் சூழலுடன் கூடிய திறந்த வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அன்று திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்களுக்கு ஆசிரியர்களால் "சிறப்பு வாழ்த்துமடல்" வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், எமது பிரதேசத்தில் முதற்தடவையாக ஆசிரியத்துவத்தின் முன்மாதிரிக்கும் அவர் ஆற்றிய தார்மீக கல்விப் பணிக்குமாய் பிரதேச ஆசிரியர்களால் "துரோணாச்சார்யா" எனும் உயர் கௌரவ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். திறந்த வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வு அனைவர் மனதிலும் மேலுமொருமுறை அவர் பற்றிய வரலாற்று தடத்தினை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி" அவர்கள் கடந்த இரு தசாப்த காலங்களுக்கு மேலாக நாவிதன்வெளி பிரதேசத்தில் கல்வித் துறையில் பலர் பல சாதனைகள் படைக்க ஒரு பிரதான கருவியாகவும், வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், இருந்துள்ளார் என்பது யாருமே மறுக்க முடியாத உண்மை. மேலும் இவர் ஆசிரியராக, பகுதி தலைவராக, பிரதி அதிபராக, மொழிகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற அதிபராக எமது பிரதேசத்தில் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்கள் வகித்த கல்வித்துறை சார் பதவிகள் ஏராளம்.
நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயமானது கல்வி வலயத்தின் பங்களிப்புடன் இன்று வரை அடைந்திருக்கும் வளர்ச்சிகளில் புதிய கட்டிடம், நவீன வகுப்பறை வசதிகள், மும்மொழி தேர்ச்சி வகுப்பறை, Smart Class Room , பாண்ட் வாத்தியம், பாடசாலையின் இணைய வசதி, அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை; 13வருட தொழில்கல்வித்துறை ஆரம்பம், புதிய பாடசாலை சீருடை மாற்றம் , புதிய பாடசாலையின் பாதணி மாற்றம், பாடசாலையின் சஞ்சிகை வெளியீடுகள், இணை ப்பாடவிதான செயற்பாடுகள் மேலும் அதிக எண்ணிக்கையிலான பல்கலைக்கழக மாணவர் அனுமதி, கல்வியற் கல்லூரி அனுமதி என மாணவர் கல்வி விருத்திக்கும் அரும்பாடுபட்ட பெருமை திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்களையே சாரும். இந்த மாற்றங்களினூடாக பாடசாலையின் செயற்பாட்டினை ஒரு நகர்புற பாடசாலைகளின் தரத்திற்கு சமமாக நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் தரத்தினை செயற்பாடு ரீதியாக உயர்த்தியதோடு நீண்ட காலமாக கல்வித்துறையில் சேவையாற்றி தனது தன்னலமற்ற உயர் சேவையினூடாக பல தலைமுறையினரின் மனதில் நீங்கா இடம்பிடித்தது மட்டுமல்லாது எதிர்கால சந்ததியும் தன் பெயர் கூறுமளவுக்கு தனது காலத்தின் உன்னத சேவையினூடாக புதிய தேசிய பாடசாலை உருவாக்கத்திற்கு வலயம் மற்றும் சமூகத்தின் பங்களிப்புடன் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தினை தேசிய பாடசாலைகளின் பட்டியலில் உள்ளடங்கச் செய்தது மட்டுமல்லாது, அக்கால கட்டத்தில் தான் ஒரு பிரதி அதிபராக இருந்தும் பல சவால்களையும் வென்று தேசிய பாடசாலை எனும் தொகுதிக்குள் பாடசாலையின் பெயரை உள்வாங்கச் செய்த வரலாற்று சாதனை பதிவுகளையும் விளம்பரங்கள் ஏதும் இன்றி இன்று விட்டுச்சென்ற பரந்த மனப்பான்மை கொண்டவர் தான் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்கள்.
நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று வீட்டுக்கு வீடு ஒரு பட்டதாரி உருவாகி இருக்கின்றார்கள் என்றால் அது திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்களின் விடாமுயற்சியும், வழிகாட்டலின் விளைவுகளும் என்றே கூற வேண்டும். இன்று இம் மாணவர்கள் பலர் நாடளாவிய ரீதியில் பல துறைகளிலும் அரச வேலை பார்க்கின்றனர் இதன் மூலம் இவரின் சேவை எமது பிரதேசத்தின் சமூக மாற்றத்திற்கும் வழிசமைத்தது எனலாம். அத்துடன் இரு தசாப்தங்களாக அரும் பாடுபட்டு நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் சேவையாற்றிய திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்கள் பல அதிபர்களின் காலத்தில் பிரதி அதிபராக கடமையாற்றி கல்வித் திணைக்களத்தினால் பணிக்கப்படும் வேலைகளை உரிய நேரத்தில் செம்மையாக நிறைவேற்றி பாடசாலையின் பெயரை உச்சம் தொட வைத்தவராவார். பாடசாலையில் இவரது பங்களிப்புடன் நடத்தப்பட்ட பல நிகழ்வுகள் கோட்டமட்டத்தில் ஏனைய பாடசாலைகளுக்கும் முன்னுதாரணமாக உள்ளது என்பது அதிபர்கள் ஆசிரியரது ஒய்வு; பிரியாவிடை. நிகழ்வுகளும். பாடசாலையில் நடத்தப்பட்ட பாராளுமன்ற அமர்வும் ஒரு சான்றாகும். மேலும் பாடசாலையின் நிர்வாக வேலைகளில் உள்ள நேர்த்தி மற்றும் மாணவர் இணைப்பாடவிதான; கல்வி அடைவு மட்ட வளர்ச்சியினையும், வெளிவாரி மதிப்பீடுகளின் போது பெற்றுக்கொண்ட உயர் புள்ளிகளையும் அவதானித்த பாடசாலையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினரும் அன்று முதல் பாடசாலையின் "IRON LADY" அதாவது பாடசாலையின் இரும்பு பெண்மணி என சிறப்பு நாமமும் வைத்து அழைக்கும் அளவுக்கு சிறப்பான சேவையாற்றியவர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்கள்
எமது பிரதேசத்திலிருந்து பலர் ஓய்வு, இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தாலும், வேறு பிரதேசத்திலிருந்து வந்து தனது முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய தன்னலமற்ற சேவையினை நல்கியவராக உள்ளவரும், தனது சேவையினூடாக அனைவர் மனங்களையும் வென்ற திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்களின் இவ் இடமாற்றமானது, நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வியிலும், சமூக அபிவிருத்தியிலும் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதுடன், திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்களினுடைய இடைவெளியினை எதிர்காலத்தில் மீள் நிரப்புதல் என்பது விடைகாண முடியாத புதிராகவே அமையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
எது எவ்வாறு இருப்பினும் நாவிதன்வெளி பிரதேசத்தில் தன்னலமற்ற சேவையினை இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக முன்னெடுத்தவரும், எங்கள் பிரதேச மக்களின் மனங்களையும் வென்ற கல்விச் செம்மலுமானவரும், இன்று ஆசிரிய சமூகத்தால் உன்னத கௌரவமான எமது மண்ணின் முதலாவது "துரோணாச்சார்யா" விருது பெற்றவருமான திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்களின் சேவை அவரது ஓய்வுக்காலம் வரை எமது தமிழ் கல்விச் சமூகத்திற்கு தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் அம்மணி அவர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவிப்பினையும் தொடர்ந்து மதியபோசன விருந்துபசார நிகழ்வுடன் அன்றைய தின நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.
Post A Comment:
0 comments so far,add yours