நூருல் ஹுதா உமர்
கல்முனையில் மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் நினைவாக அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாகவும் சமகால அபிவிருத்தி மற்றும் அரசியல் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு தெளிவூட்டும் ஊடக சந்திப்பு ஒன்றை 2024.05.18 ஆம் திகதி கல்முனை மாநகரசபை கேட்போர் கூடத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கூட்டியிருந்தார்.
ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், திட்டமிட்டுள்ள குறித்த கட்டிடத்தொகுதியானது
இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் ஆய்வு ரீதியான ஆவணங்கள் சேகரித்து அடுத்த தலைமுறைக்கு முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்தும் இடமாகவும், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் எதிர்மறைக்கருத்துக்களை சட்ட ரீதியாகவும் ஒருமித்த கருத்துக்கள் ஊடாகவும் எதிர்கொள்ள தீர்மாங்களை எடுக்கும் இடமாகவும், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நேரான பாதையில் இட்டுச்சென்று அவர்களில் இருந்து சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் இடமாகவும், மர்ஹும் தலைவர் அஷ்ரப் அவர்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் கருத்துக்களை சேகரித்து வைக்கும் இடமாகவும் குறித்த கட்டிடத்தொகுதி அமையும் என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ள குறித்த கட்டிடத்தொகுதிக்கான சரியான பெயரை புத்திஜீவிகளை அணுகி அவர்களின் ஒப்புதலுடன் வைப்போம் என்றும் இந்த கட்டிடத்தொகுதியானது கல்முனை வாடி வீட்டு வீதியில் அமையும் என்றும் தெரிவித்தார்.
குறித்த கட்டிடத்தொகுதியை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு தன்னுடன் இருந்து ஒத்துழைத்த அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமையவுள்ள கட்டிடத்தொகுதியானது சர்வதேச தரத்தில் அமையும் என்றும் தெரிவித்தார்.
முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், D100 என்ற 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் விடுபட்டிருந்த அபிவிருத்திப்பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் நலன் மற்றும் இருப்பு தொடர்பில் கட்சி கூடி, சரியான தீர்மானங்களை எடுக்கும் என்றும் பிரதேச அபிவிருத்திகள் மற்றும் மக்கள் நல திட்டங்களை கையாள்வது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளான தாங்கள் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
கல்முனை தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி சிலரால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஹரீஸ்,
கல்முனை தமிழ் முஸ்லிம் மக்கள் அவர்களது தேவைகள் அடிப்படையில் பிட்டும் தேங்காய் பூ போலவும் இருப்பதாகவும் பிரச்சனைகளை காரணம் காட்டி அரசியல் செய்ய முனைபவர்களே குறித்த போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாகவும் தெரிவித்தார். தன்னையும் மாற்றுப்போராட்டம் ஒன்றை செய்ய சிலர் கோருவதாகவும் அவ்வாறான குறுகிய எண்ணம் தன்னிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
பாரிய பிரதேசங்களை உள்ளடக்கிய கொழும்பு போன்ற மாநகர சபைகளை துண்டாட விரும்பாத சில அரசிய பிரமுகர்கள் கல்முனையை இனரீதியாக பிரிக்க முனைவது ஆச்சரியத்தை தருவதாகவும் தெரிவித்தார்.
உண்மையில் பல்வேறு அலகுகளாக பிரிவே வேண்டும் என இப்பிரதேச மக்கள் விரும்பினால் அதற்கு தான் தடையாக இருக்கப்போவதில்லை என்றும் இதய சுத்தியுடம் பேச்சுவார்த்தையூடாக அதனையும் செய்யத் தயார் என்றும் சரியான எல்லைகளை வரையறுத்து அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும் என்றும் நிலத்தொடர்பற்ற எல்லை என்பது சாத்தியப்படாது என்றும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours