(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம வெகு விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டக்காரர்களை சந்திக்கவிருக்கிறார்.

அம்பாறை கச்சேரியில் நேற்று(24) திங்கட்கிழமை மாலை இடம் பெற்ற சிவில் குழுவினருடனான சந்திப்பில் மேற்படி உறுதி அளிக்கப்பட்டது.

 கல்முனை வடக்கு பிரதேச செயலகம்  முன்பாக நேற்று  இடம் பெற்ற பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தை அடுத்து அம்பாரை கச்சேரியில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது 
.

மாவட்ட அரசாங்க அதிபர் பொலிஸாரின் ஊடாக இச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்.

அவர் வீதி மறியல் போராட்டத்தை கைவிடுமாறும்  நேரில் கலந்துரையாடவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கல்முனை வடக்கு பிரதேச சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.கலையரசன் செ.கஜேந்திரன் ஆகியோர் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபருடனான சந்திப்பில் ஈடுபட்டனர்.

அச் சந்திப்பில் அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம  மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெக ராஜன் ஆகியோருடன் சிவில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .

அதன் போது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மக்கள்  எதிர்நோக்கும் பிரச்சினைகள் தேவைகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.

 உப பிரதேச செயலக விவகாரம் மற்றும் கணக்காளர் விவகாரமும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

 இருந்தபோதிலும் அரசாங்க அதிபருடனான சந்திப்பு எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்று பிரதிநிதிகள் தெரிவித்தார்கள்.

இந் சந்திப்பு தொடர்பாக  கலந்து கொண்ட பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்

அரசாங்க அதிபருடன் சுமார் இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது . கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது மேற்கொள்ளப்படும் அதிகார அத்துமீறல்கள் , மக்களுக்கான அரச சேவையை வழங்குவதற்கு இடப்படும் முட்டுக்கட்டைகள் ,அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக விளக்கியிருந்தோம்.

அரசகாணிகள் அபகரிப்புக்கள், கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் இதற்கு உடந்தையாக செயற்படும் செயல்கள் என்பவற்றையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.


சுமார் மூன்று மாதங்கள் கடந்து அமைதிப்போராட்டத்தில் ஈடுபடும் இந்த பொது மக்களை நேரில் வந்து சந்திக்காதது தொடர்பாகவும் எமது கவலையையை சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த மாத இறுதியில் வருவதாகவும் ,தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ளவதாகவும் கூறினார். ஆனால் இந்த சந்திப்பும், அரசாங்க அதிபரின் பதிலும் எமக்கு திருப்பதியானதாக இல்லை எனவும் கருத்து தெரிவித்தனர்.

 இதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை 93 வது நாளாக போராட்டக்காரர்களின் போராட்டம் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours