தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடு முழுவதும் நடாத்தப்படும் "வெல்வோம் ஸ்ரீலங்கா" நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை இம்மாதம் 28,29 ஆம் (வெள்ளி, சனி) திகதிகளில் காலை 9 மணி முதல் பி.ப 4.30 மணி வரை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது தொழில் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊழியர்களைப் பதிவு செய்தல், B பத்திரங்களை வழங்குதல், பின்னுரித்தாளிகள் மாற்றம் செய்தல், ஓய்வுக்கு முன்னரான ஊழியர் சேமலாப நிதி மீளளிப்பு நலன்களை பெற்றுக்கொள்ளல் என்பன தொடர்பான அறிவுறுத்தல்கள், 30% மீளளிப்பு நலனுக்கான உரித்துடமையை பரீட்சித்தல், ஊழியர் சேமலாப நிதியை பிணையாக வைத்து வீட்டுக்கடன் பெறுதல் தொடர்பான வழிகாட்டல்கள், ஓய்வூதிய மீளளிப்பு நலன்களை பெற்றுக்கொள்வது குறித்த அறிவுரை, இறந்த ஊழியர்களின் பின்னுரித்தாளிகளுக்கு ஊழியர் சேமலாப நிதிய மீளளிப்புகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான அறிவுரை, மற்றும் பிற சேவைகள் என பல்வேறு பட்ட சேவைகளைளையும் பெற்றுக் கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு நாள் நடமாடும் சேவையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, தொளிலாளர் திணைக்களம், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், இலங்கை மத்திய வங்கி, ஊழியர் நம்பிக்கை நிதியம், தொழில் பயிற்சி அதிகார சபை, தேசிய தொழிலாளர் கற்கை நிறுவனம், தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், சிறு தொழில் அபிவிருத்தி பிரிவு, தொழில் அபிவிருத்திச் சபை, அரச மற்றும் அனுமதிப் பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலை வாய்பு முகவர்கள் என மேற்குறித்த நிறுவனங்கள் கலந்து கொண்டு தமது சேவையினை வழங்கிவைக்கவுள்ளனர்.
இச்சேவைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தொழில் அலுவலகத்தின்
உதவி தொழில் ஆணையாளரைத் (065 2222 151) தொடர்பு கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours