(எஸ்.அஷ்ரப்கான் - )

இலங்கையின்  ஆசிரியர்கள் அதிபர்களுக்கு  எழுத்து மூலம் வாக்குறுதிய ளிக்கப்பட்டிருந்த சுபோதினி அறிக்கையின் மூன்றில் இரண்டு பகுதி சம்பள முரண்பாட்டுத் தீர்வின்படி இன்னும் இரண்டு பகுதி வழங்கப்படாமையை சுட்டிக்காட்டி அதனை பெறுவதற்காக பல்வேறு பேச்சுவார்த்தைகள் செய்தும் பலனில்லாத நிலையில் எமது  ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி போராட்டத்தில் குதிக்கவுள்ளது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது அல்-கமரூன் வித்தியாலயத்தில் நேற்று (09) மாலை 6 மணிக்கு  இடம்பெற்றது.

இங்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அம்பாறை மாவட்ட செயலாளர் எம். எஸ். சத்தார், ஆசிரியர் சேவை சங்கத்தின் கல்முனை வலைய இணைப்பாளர் எஸ்.எம். ஆரிப், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கல்முனை கல்வி வலைய செயலாளர் எம். எஸ். எம். சியாத், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கல்முனை கல்வி வலைய இணைப்பாளர் ஏ. எம். எம். சாகிர் ஆகியோரும் கலந்துகொண்டு இங்கு கருத்து வெளியிட்டனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஏ. ஆதம்பாவா,

எதிர்வரும் 12 ஜுன் 2024 நாடு முழுவதும் வலய மட்ட அளவில் போராட்டங்கள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்தப் போராட்டத்தின் நோக்கத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் கேட்பது சம்பள அதிகரிப்பு அல்ல. சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு தான் எனக்கு வேண்டும். அதற்கான போராட்டமே இது எனவே எமக்கு முழு ஆதரவு தர வேண்டும்.

இதற்காக அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி வலையங்களிலும் உள்ள அதிபர் ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். இதேவேளை கடந்த காலங்களில் எமது போராட்டங்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பூரண ஒத்துழைப்பு கிடைக்கின்றபோதும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும்  அதிபர் ஆசிரியர்கள் பலர் பூரண ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற ஒரு நிலை காணப்படுகின்றது. எனவே தயவு செய்து இம்முறை எமது போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கையிலுள்ள அனைத்து ஆசிரியர்களும் 120 நாட்களுக்கும் மேலாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைமையில் நடத்திய போராட்டத்தின் விளைவாக 1997 ஆம் ஆண்டு முதல் நிலவி வந்த ஆசிரியர் அதிபர் சம்பள வேறுபாட்டில் 1/3 பங்கை வென்றெடுக்க முடிந்தது. அப்போது எமது கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை கருத்திற்கொண்டு, முழு ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட சுபோதானி சம்பளக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் உள்ளடங்கிய சம்பளத்தில் மேலும் 2/3 பங்கு எமக்கு எஞ்சியுள்ளது.

தற்போது கல்வி அமைச்சும் ஆசிரியர்-அதிபர் சம்பள வேறுபாட்டை களைவதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவும் ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடு இருப்பதாகவும் அதனை தீர்க்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டுள்ள போதிலும் அதற்கான தீர்வுகளை வழங்குவதை அரசாங்கம் தவிர்த்துள்ளது; இந்த நிலையில், அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, எஞ்சிய 2/3 சம்பள ஏற்றத்தாழ்வை வென்றெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், 2024 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, ஆசிரியர்- அதிபர் சங்கக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours