வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல்விழா உற்சவத்திற்காக வரலாற்றில் முதல் தடவையாக அதிகப் படியான யாத்திரீகர்கள்
கானக பாதயாத்திரையை மேற்கொண்டு  வருகின்றனர்.

வரலாற்றில் கானகப் பாதை திறந்த( 30) முதல் நாளில் சுமார் 7000 பாதயாத்திரீகர்கள் பயணித்தமை இதுவே முதல் முறையாகும்.

அதேபோல உகந்தை முருகனாலய கொடியேற்றம் இடம் பெற்ற கடந்த ஆறாம் தேதி கானகத்தில் பிரவேசித்த அடியார்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். இதுவும் ஒரு வரலாற்று பதிவாகும்.

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த சி.ஜெயராசா தலைமையிலான 56 நாள் மிகநீண்ட பாதயாத்திரை அடியார்கள் மற்றும் மாமாங்கேஸ்வரர் யாத்திரை குழுவினர் உள்ளிட்ட 7 ஆயிரம் அடியார்கள் கலந்து கொண்டார்கள்.

இம்முறை வழமைக்குமாறாக சிங்கள அடியார்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.
 மற்றும் படையினர் ஆராய்ச்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
 இந்து பக்தர்கள் பெரும்பாலும் காவி உடை தரித்தே காணப்பட்டார்கள். ஆனால் ஏனைய அடியார்கள்  சப்பாத்து கண்ணாடி நாகரீகஉடைகளோடு ஒரு சுற்றுலா பாணியில் பயணித்தார்கள்.

 வெளிநாட்டவர்கள் சிலரும் கூடவே பயணித்தார்கள்.

இடையில் பரவலாக அன்னதானம் வழங்கப்பட்டது. தண்ணீரை சிவ தொண்டன் அமைப்பு சேவற்கொடியோன் அமைப்பு ஸ்பான்ட் அமைப்பு என பல தரப்பினரும் வழங்கினர். சந்நதி மோகன் சுவாமி மற்றும் ஞானம் லைக்கா அமைப்பினர் முதல் நாள் பக்தர்களுக்கான உலருணவுடன் அழகான பையையும் வழங்கினார்கள்.
மேலும் குளிர்பானங்கள் தேநீர் பால் தேநீர் பிஸ்கட் தாம்பூலம் போன்றவற்றை ஜேர்மன் கலா சுவிஸ் விஜி மற்றும் அசோகன் போன்றோரின் அனுசரணையுடன் பிரபல சமூக சேவையாளர் ஜெயசிறில் வழங்கி வைத்தார். இப்படி பல பரோபகாரிகள் உதவி செய்தார்கள்.நாவலடியில் வழமைபோல வைத்திய கலாநிதி டாக்டர் அழகையா லதாகரனின் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

வியாழை நதிக் கரையோரம் இம்முறை கூடுதலான பக்த அடியார்களால் களைகட்டியது. ஆனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் அந்த இடத்தில் போதுமான தண்ணீர் வசதி பாதுகாப்பு வசதி மேற்கொள்ளப்படவில்லை என்பது பக்தர்களின் குற்றச் சாட்டாகும்.


கதிர்காம காட்டுப் பாதை மொத்தம் 56 மைல்கள் ஆகும்.

உகந்தையிலிருந்து ஐந்து மைல்தூரத்தில் வாகூரவட்டை .பின்பு 7 மைல் தூரத்தில் குமுக்கனாறு. 12 மைல் தூரத்தில் நாவலடி. பின்னர் 11 மைல் தூரத்தில் வியாழை. 6 மைல் தூரத்தில் வள்ளி அம்மன் ஆறு. 8 மைல் தூரத்தில் கட்டகாமம். அடுத்து 8 மைல் தூரத்தில் கதிர்காமம் மொத்தமாக காட்டுப்பாதை 56 மைல்களை உள்ளடக்கியது .

சுமார் 6 நாட்கள் இந்த காட்டுப் பயணத்தை அடியார்கள் மேற்கொள்வது வழமை.

கடந்த 30 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட காட்டுப் பாதை  11 ஆம் தேதி மூடப்படுகிறது.

கதிர்காம கொடியேற்றம் 06ஆம் திகதி நடைபெற்றது. இம மாதம் 22ஆம் திகதி தீர்த்தம் இடம் பெறும் .

கதிர்காமப் பாதயாத்திரை அகத்திய முனிவர் தொடக்கி அருணகிரியார் ஈறாகவும், யோகர் சுவாமி முதற்கொண்டு சித்தானைக்குட்டி வரை எண்ணிறைந்த சித்தர் பெருமக்கள் இன்றுவரை தம் பாதக் கமலங்களை பதித்து பவனி சென்ற பாதையில் வருடாவருடம் நாமும் பயணிக்கின்றோம்.
"ஷேத்திராடனம்" எனும் நூலில் கூறப்பட்டுள்ளன.

1,000 வேல்களுடன், 1000 முருக பக்தர்கள் கதிர்காமம் நோக்கி பயணிக்கும் மாபெரும் வேல் யாத்திரை வரலாற்றில் இரண்டாவது தடவையாக கடந்த  01 ஆம் தேதி  உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையில்  ஆரம்பமாகி கொடியேற்ற தினத்தில் (6)கதிர்காமத்தை சென்றடைந்தது.

அனைத்து வேல் அடியார்களும் காவி வஸ்திரங்கள் தரித்து அணிவகுத்து சென்றமை பக்திப் பரவசத்தை ஊட்டியது.

பாதயாத்திரை என்றால் இப்படித்தான் பக்தி முக்தியாக பயபக்தியுடன் ஆசாரசீலத்துடன் செல்ல வேண்டும் என்பதை இம்முறை இடம் பெற்ற பல யாத்திரை குழுவினரின் செயற்பாடுகள் பலருக்கும் உணர்த்தியது.

கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையை ஆரம்பித்த பக்தர்கள் கதிர்காம திருத்தலத்தை அடைந்து வருகின்றனர்.

 பாதயாத்திரையானது குமண வன பறவைகள் சரணாலய காட்டுவழி பாதையூடாக ஆரம்பிக்கப்பட்டு 6 நாட்களில் 
குறித்த யாத்திரையின் போது தாம் கந்தனை உணர்ந்ததாக யாத்திரிகர்கள் பக்தி பரவசத்துடன் தெரிவித்திருந்தனர்.

கதிர்காமத் திருத்தலத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் கடந்த 06 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. 

சர்வமத தலைவர்கள், கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர உள்ளிட்ட அதிகளவிலான பக்தர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

கதிர்காம கந்தனின் வருடாந்த ஆடிவேல் திருவிழாவில் இந்த ஆண்டுக்கான முதலாவது திருவீதி உலா( பெரஹரா) கடந்த 06 திகதி நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது.

கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜுலை மாதம் 22 ஆம் திகதி மாணிக்க கங்கையில் நடைபெறவுள்ள நீர்வெட்டும் நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது.


விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு குறூப்  நிருபர்






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours