பாறுக் ஷிஹான்

சிறுவர்களுடைய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பில் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகிலா இஸ்ஸடீன் தெரிவித்தார்


கல்முனைப் பிராந்தியத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வன்முறைகளில் இருந்து அவர்களை பாதுகாத்து பராமரிப்பது தொடர்பாக துறைசார்ந்தவர்களுடனான உயர்மட்ட கலந்துரையாடல் புதன்கிழமை (10) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் உரையாற்றிய போதே பிராந்திய பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்முறைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதும் வன்முறைக்குள்ளான சிறுவர்களை பராமரித்து அவர்களுக்கான சேவைகளை திறன்பட வழங்குவதற்கும் துறைசார்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும். அது அவர்களின் கடமையும் பொறுப்புமாகும். அந்த வகையில் சகல நிறுவனங்களும் ஒன்றுபட்டு செயல்படுகின்ற போது மாத்திரமே சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை குறைக்க முடியும். அத்துடன் பாதிக்கப்படுகின்ற சிறுவர்களையும் பராமரித்து அவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும் என்றார்.
 
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஏ.எஸ்.எம்.எஸ்.ஷாபி, உளநலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல், தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் உள்ளிட்ட சுகாதார மற்றும் கல்வித் திணைக்களங்களின் அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய உளநலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல் குறித்த கலந்துரையாடலினை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பங்குதாரர்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டதுடன் பின்வரும் தீர்மானங்களையும் நிறைவேற்றினர்.

கல்முனை பிராந்தியத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைத்து சிறுவர்களை பாதுகாத்தல்.
வன்முறைகளுக்கு உள்ளான சிறுவர்களை பராமரித்து அவர்களுக்கான சேவையினை திறன்பட வழங்குதல்.
சிறுவர்களின் நலன் கருதி துறை சார்ந்தவர்களை ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட குழுவினை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டி, சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுதல்.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அவர்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் என பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours