நூருல் ஹுதா உமர்

தேசிய மக்கள் சக்தியினரின் அழைப்பின் பேரில் கிழக்கின் கேடயம் அமைப்பினருடனான சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் ராஜகிரிய தலைமையகத்தில் இன்று (14) இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி வேட்பாளரிடம் முன்வைக்கும் கோரிக்கைகளை கிழக்கின் கேடயம் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.சபீஸ் தேசிய மக்கள் சக்திக்கு முன்வைத்தார்.


கிழக்கின் கேடயத்தின் ஒப்பந்த நிபந்தனைகளாக 21 வயதுக்குள் அடிப்படை (3S) தகுதிடைய அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பினை பெறுவதற்கு வழி அமைத்தல். அதனை உற்பத்தி பொருளாதாரம், முயற்சியாண்மை, கடல்சார் நீரியல் வளங்கள், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் இணைந்ததான திட்டங்களை உருவாக்குதல், கிழக்கு மாகாணத்தின் வளங்களை மையப்படுத்தி புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல், மருதமுனையில் நெசவு தொழிற்சாலை, ஒலுவிலில் டின் மீன் தொழிற்சாலை போன்ற மாவட்ட வளங்களை பயன்படுத்தும் விதமாக கைத்தொழில் பேட்டைகள் உருவாக்குதல். வேளாண்மை பயிர் செய்கையை இரண்டிலிருந்து மூன்று போகமாக மாற்றுவதற்கு உரிய திட்டங்களை செயற்படுத்தல்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் நிர்வாக பயங்கரவாதம் மற்றும் காணி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரல், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவம், சட்ட மற்றும் கல்வி பீடத்தினை ஆரம்பித்தல், அனைத்து மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைய கூடியவாறு மக்களுடன் தேவையுடைய அரசாங்க காரியாலயங்களை நிறுவுதல். (உதாரணமாக ஆட்பதிவு திணைக்கள காரியாலயம், குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயம், சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் காரியாலயம் போன்றன)

இலங்கையின் சுற்றுலாத்துறை கேந்திர நிலையங்களாக இருக்கின்ற அறுகம்பே மற்றும் பாசிக்குடா ஆகிய இடங்களை வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அபிவிருத்தி செய்தல். போன்ற பல்வேறு வகையான ஒப்பந்தங்களை கிழக்கின் கேடயம் அமைப்பினர் முன்மொழிந்துள்ளனர். இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுச் செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க கலந்து கொண்டிருந்தார். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours