(அஸ்லம் எஸ்.மெளலானா)
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின்நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற படகுத் தரிப்புத் துறையை (Boatyard) அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கான இணை அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதற்கான எழுத்து மூல கோரிக்கை மற்றும் திட்ட வரைபை கலாநிதி ஜெமீல் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இயந்திரப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு இப்பகுதியில் Boat yard ஒன்று இல்லாதிருப்பதால் அப்படகுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை படகுத் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இதனாலf அவற்றின் உரிமையாளர்களும் மீனவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத் துறையொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
எனினும் ஒலுவில் பகுதியில் துறைமுகம் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதால் சாய்ந்தமருதில் படகுத்துறை அமைக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது.
ஆனால் ஒலுவில் பகுதியில் அமைக்கப்பட்ட துறைமுகம் பயன்பாட்டுக்கு உகந்ததாக அமையாத காரணத்தால் அங்கும் படகுகளை தரித்து வைக்க முடியவில்லை.
இந்நிலையில் பல தசாப்த காலமாக ஆழ்கடல் மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பாரிய சவாலான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில்
ஐ.தே.க. அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கான இணை அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான ஏ.எம். ஜெமீல், இவ்விடயத்தை ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்.
இதன் பிரகாரம் சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத்துறையை அமைப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சாய்ந்தமருது முகத்துவாரம் அமைந்துள்ள பாலத்தை போதியளவு உயர்த்தி நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக முன்னெடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அவ்வாறே முகத்துவார தோணாப் பகுதியை தேவையானளவு தோண்டி ஆழமாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கரையோரம் பேணல் திணைக்களத்திற்கு ஜனாதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours