திருக்கோவிலில் இல்மனைட் அகழ்விற்கான ஆய்வு நடவடிக்கை பா.உ கலையரசன் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பா.உ சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்டவர்களின் நடவடிக்கையால் அகழ்வு நடவடிக்கையை முற்றாக நிறுத்தி அகழ்வாளர்களை முற்றாக வெளியேற்ற நடவடிக்கை...
சில தினங்களாக திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விநாயகபுரத்தில் அவுஸ்ரேலியா நாட்டு நிறுவனமொன்று இல்மனைற் அகழ்வு சம்மந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் போது அங்குள்ள மக்களால் இல்மனைற் அகழ்வினை மேற்கொள்ள கூடாதென்று ஜனநாயக முறைப்படி ஆர்பாட்டத்தை மேற்கொண்டனர். நேற்று முந்தினம் ஆய்வுகளை மேற்கொண்டபோது மக்களும் அரசியல் வாதிகளும் சென்று தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். ஆனாலும் 14 திகதி காலையில் மீளவும் ஆய்வு இயந்திரங்களை பயன்படுத்தி வேலை மேற்கொண்ட போது அங்குள்ள மக்கள் மீளவும் ஒன்று திரண்டு அதனை நிறுத்து மாறு கோரி போராட்டத்தினை முன்னெடுத்த வேளை பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து உரிய பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடியதுடன், உரிய பிரச்சனையை இன்று ஜனாதிபதியை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோருக்கு எடுத்துரைத்ததன் பேரில் இதனை உடனடியாக நிறுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது திருக்கோவில் பிரதேசத்தில் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இல்மனைட் அகழ்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சட்டத்தரணிகள் சகிதம் நாங்கள் சென்று தெரிவித்தோம். அதன் நிமித்தம் அவர்கள் தற்காலிகமாக அதனை நிறுத்திவிட்டு மீளவும் இன்று அதனை முன்னெடுப்பதற்கான ஆய்வினை மேற்கொள்கின்றார்கள். இது தொடர்பில் நேற்றைய தினம் நாங்கள் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து இது தொடர்பான சகல ஆவணங்களையும் சமர்ப்பித்து அனைத்து விடயங்களையும் அவருக்குத் தெளிவு படுத்தினோம்.
அத்துடன் இன்றைய தினமும் இது தொடர்பில் திருக்கோவில் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருடன் நான் கலந்துரையாடியும் இருந்தேன்.
இன்றைய கலந்துரையாடல் மற்றும் நேற்று எம்மால் வழங்கப்பட்ட கடிதம் என்பவற்றை மையமாகக் கொண்டு இன்று மாலைக்குள் இவ்விடயத்தினை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் கூறியிருந்தார். அது மட்டுமல்லாது, இன்றைய தினம் ஜனாதிபதியைச் சந்தித்த எமது சக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரும் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
நிச்சயமாக இந்த இல்மனைட் அகழ்வினை நிறுத்துவது தொடர்பாக எங்களால் முடிந்த நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம். இது சம்மந்தமாக அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இவர்களை இன்றிலிருந்து இங்கிருந்து வெளியேற்றும் முகமான உத்தரவாதத்தை எமது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றிருக்கின்றார்கள். இவர்கள் இன்று வெளியேற வேண்டும் இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் விரைந்து செயற்படுவோம். இதற்கான அனுமதி வழங்கப்பட்டவர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நேரடியாகத் தொடர்பு கொண்டு இதனை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது என்பதையும் எமது மக்களுக்கு சொல்லிக்கொள்கின்றேன்.
Post A Comment:
0 comments so far,add yours