தமிழர் தாயகத்தில் உள்ள கிராமிய பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் உறவுகள் மூலம் நிதி பங்களிப்பு கிடைக்க செய்கின்ற செயல் திட்டத்தை சுவிற்சலாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற அரசியல், சமூக, பொதுநல, ஊடக செயற்பாட்டாளர் செல்லத்தம்பி சிவச்செல்வம் விந்தன் ஆரம்பித்து வைத்துள்ளார்.

செல்லத்தம்பி சிவச்செல்வம் விந்தனின் சிந்தனையில் இவரின் 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மூன்று கிராமிய பாடசாலைகளின் வறிய மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களை சேர்ந்த 30 மாணவர்களுக்கு தலா 10000 ரூபாய் இவரின் சொந்த நிதியில் இருந்து அன்பளிப்பு செய்யப்பட்டது.

யாழ். தேவரையாளி இந்து கல்லூரி, யாழ். அல்வாய் ஸ்ரீலங்கா பாடசாலை, யாழ். வதிரி வடக்கு மெ. மி. த. க பாடசாலை ஆகிய பாடசாலைகளில் இருந்து தரம் 01 மாணவர்களை தெரிவு செய்து இம்மாணவர்களுக்கு சம்பத் வங்கியில் கணக்கு திறந்து சகாய நிதியை வைப்பு செய்தார். இந்நிலையில் சம்பத் வங்கியின் பங்களிப்பாக ஒவ்வொரு மாணவருக்கும் 5000 ரூபாய் மேலதிகமாக வைப்பு செய்து கொடுக்கப்பட்டது. 

இப்பாடசாலைகளின் கல்வி சமூகம், மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் மகத்தான நன்றி அறிதல்களை செல்லத்தம்பி சிவச்செல்வம் விந்தனுக்கும், சம்பத் வங்கிக்கும் தெரிவித்துள்ளார்கள். இது புலம்பெயர் தமிழ் உறவுகள் மத்தியில் அதீத பிரசித்தி பெற்ற நிலையில் ஏராளமான புலம்பெயர் தமிழ் உறவுகள் செல்லத்தம்பி சிவச்செல்வம் விந்தனை அணுகி இச்செயல் திட்டம் தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டல் ஆகியவற்றை பெற்று தாயகத்தில் கிராமிய பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பேரார்வத்துடன் நிதி பங்களிப்புகள் வழங்க ஆரம்பித்துள்ளனர்.

கிராமிய பாடசாலைகளில் மாணவர்களின் வருகையை ஊக்குவித்தல், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை இம்மாணவர்களுக்கு ஏற்படுத்துதல் ஆகியன இவர் ஆரம்பித்து வைத்த செயல் திட்டத்தின் பிரதான நோக்கங்கள் என்று செல்லத்தம்பி சிவச்செல்வம் விந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours