(பாறுக் ஷிஹான்)



கறவை மாடுகளின் பால்கள் கூட எம்மை தாண்டி கொழும்பை செல்கின்றது.எனவே பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு உண்மையான தலைமைத்துவம் எமக்கு வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி இணையமைப்பாளரும் டெலிபோன் சின்னம் இலக்கம் 7 இல் போட்டியிடும்  வேட்பாளருமான  வெள்ளையன் வினோகாந் தெரிவித்தார்.

2024 ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில்  அம்பாறை மாவட்டம்   டெலிபோன் சின்னம் இலக்கம் 7 இல் போட்டியிடும் அவர் அம்பாறை ஊடக அமையத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது


இந்த பாராளுமன்ற தேர்தலானது அனைத்து கட்சிகளுக்கும் சவாலான தேர்தலாக அமைந்திருக்கின்றது.கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் முகமாக ஒரு கட்சியை ஆதரித்திருந்தார்கள்.ஆனால் அவர்கள் ஆதரித்த கட்சியானது இன்று ஏட்டுச்சுரக்காய் போன்று இருப்பதை எம்மால் உணர முடிகின்றது.இந்த நாட்டில் அனைத்து மக்களும் வாழ வேண்டும்.கல்வி சுகாதாரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் முன்னிறுத்தி உள்ள எங்கள் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள சகல மக்களுக்கும் இலங்கையில் இருந்த எந்தவொரு எதிர்கட்சி தலைவரும் செய்யாத உதவிகளை செய்து கொண்டிருக்கின்றார்.

எனவே நாங்கள் இத்தேர்தலில் களமிறங்கி இருக்கின்றோம்.அவரை ஒரு பிரதமராக்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.அந்த அடிப்படையில் நானும் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கி இருக்கின்றேன்.இந்த தேர்தல் காலத்தில் அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் அதிகளவான கட்சிகள் களமிறக்கப்பட்டிருக்கின்றன.இந்த காலகட்டத்தில் தான் இக்கட்சிகளுக்கு மக்கள் மீதான அன்பு அதிகரிக்கின்றது.மக்கள் மீதான பாசம் அதிகமாகின்றது.உரிமை அதிகமாகின்றது.ஆனால் கொரோனா மற்றும் வெள்ளப் பாதிப்புகளையும் மக்கள் எதிர் கொண்டிருந்தனர்.அம்மக்கள் இவ்வாறு அநாதைகளாக நிர்க்கதிக்குள்ளான போது எவரும் உதவி செய்யவில்லை.எனவே நாங்கள் அவ்வாறில்லை.வீடு இல்லாதவர்களுக்கு வீடுகளை வழங்கி இருந்தோம்.இன்று அந்த வீடுகள் குறையாக கிடக்கின்றன.கோட்டபாய அவர்களுக்கு 69 இலட்சம் வாக்குகளை அன்று மக்கள் வழங்கி இருந்தார்கள்.இதனால் அவ்வீடுகள் பூரணமாக நிறைவு செய்யப்பட்டிருக்கவில்லை.அதன் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க கூட இவ்வீடுகளை பூரணமாக்கவில்லை.தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் கூட இந்த வீடுகளை பூரணமாக நிர்மாணித்துக் கொடுக்கப்போவதில்லை.எனவே மக்களுக்கு ஒரு விடயத்தை தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.இவ்வாறான வீடுகளை பூரணப்படுத்துவதற்கும் புதிய வீடுகளை இன்னும் நிர்மாணிப்பதற்கும் காணி இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் சஜித் பிரேமதாச மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.

எனவே அவர்களுக்காக நாங்கள் இத்தேர்தலில் களமிறங்கி இருக்கின்றோம்.தேர்தல் காலங்களில் மக்களுக்கு அதிகமான இலவசங்களை வழங்குவார்கள்.இவ்வாறான நலத்திட்டங்கள் இலவசங்களை கண்டு நீங்கள் (மக்கள்) ஏமாறுவீர்களாயின் எதிர்வரும் 5 வருடங்கள் உங்களுக்கு சூனிய காலமாக  மாறி வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.எனவே மக்கள் அனைவரும் சிந்தியுங்கள்.இலவசங்களுக்கு ஒரு போதும் சோரம் போய் விடாதீர்கள்.இவ்வாறு சோரம் போய் தான் கிட்டத்தட்ட 65 வருட அரசியல் வறிதாக போய் விட்டது.இன்று பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரையிலான சில பகுதிகளுக்கு குடிநீர் மக்களுக்கு இல்லை.இது தான் அரசியல்.ஆனால் இன்று ஆண்களுக்கு மதுபானமும் சீமெந்து பைக்கற்றுக்கள் உலருணவு பொருட்களும் தற்போது விநியோகித்து வருவதாக அறிகின்றோம்.இதுவா அரசியல்? இதுவா தேர்தல்? அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் என்பது இல்லை .இது தான் திட்டவட்டமான உண்மை.கடந்த தேர்தலிலும் இவ்விடயம் இல்லாமல் செய்யப்பட்டிருந்தது.ஆனால் இம்முறை சஜித் அணி சார்பாக களமிறங்கி இருக்கின்றோம்.

எனவே தமிழ் மக்களுக்கு சஜித் பிரேமதாசவுடன் இணைந்து தலைமைத்துவத்தை தருவதற்கும் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.எமது கறவை மாடுகளின் பால்கள் கூட எம்மை தாண்டி கொழும்பை செல்கின்றது.எனவே பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு உண்மையான தலைமைத்துவம் எமக்கு வேண்டும்.வீடுகளில் வேலையற்றுள்ளவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.எனவே இந்த தேர்தலில் உங்களை நோக்கி வருகின்றவர்கள் இனம் என்பார்கள் மொழி என்பார்கள்.எமது இரத்தத்தை சூடாக்கின்ற மாதிரி பேசுவார்கள்.இலவசங்களை தருவார்கள்.அவர்களை தேர்தல் முடிந்த மறுநாள் இருந்து 5 வருடங்களுக்கு உங்களால் காண முடியாது.அவர்களுக்காக பரிந்து பேசுவதற்கு கூட உங்கள் பகுதியில் உள்ள தலைவர்கள் வருவார்கள்.அவர்களிடம் கூறுங்கள்.

சஜித் பிரேமதாச சார்பாக அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியுள்ள தமிழனுக்கே எமது வாக்கு என்று கூறுங்கள்.எனவே அம்பாறை மாவட்ட மக்கள் அனைவரும் தெளிவடைய வேண்டும் சந்தர்ப்பமாக இத்தேர்தல் அமைந்துள்ளது.இன்று சஜித் பிரேமதாச அவர்கள் பிரதமராக வருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.இந்த கட்சிக்குள் ஊழல் இருக்கின்றது மோசடி நடைபெறுகின்றது என  அபாண்டமாக விமர்சித்து கொண்டிருக்கின்றார்கள்.இந்த கட்சியை கூட ரணிலால் அசைக்க முடியாதுள்ளது.கிருணிக்கா கூட எம்முடன் இருக்கின்றார்.எம்முடன் அவர் மிக மகிழ்ச்சியாக தேர்தலில் களமிறங்கியுள்ளார்.சில வதந்திகளை பரப்பி எமது கட்சியின் கட்டமைப்பை ஒரு சிலர் குழப்ப முயல்கின்றார்கள்.இதில் எதுவித உண்மையும் இல்லை.அத்துடன் சஜித் பிரேமதாசவின் கட்சியில் குடும்ப ஆதிக்கம் இல்லை என்பதையும் கூற விரும்புகின்றேன் என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours