(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை மாநகர சபையில் பழுதடைந்துள்ள திண்மக் கழிவகற்றல் சேவை வாகனங்களை துரிதமாக திருத்தி முடிக்குமாறு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் சேவைக்குரிய வாகனங்களில் ஒரு கொம்பெக்டர் மற்றும் 04 உழவு இயந்திரங்கள் உட்பட 06 வாகனங்கள் பழுதடைந்திருக்கின்ற நிலையில் அவை திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

எனினும் குறித்த வாகனங்களின் திருத்த வேலைகள் தாமதமடைவதால் திண்மக் கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் பாரிய அசெளகரியங்கள் ஏற்படுவதாக மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் மாநகர ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து வாகன திருத்தும் தளத்திற்கு இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இயந்திர திருத்துனர்களுக்கு ஆணையாளர் இந்த பணிப்புரையை விடுத்திருக்கிறார்.

இதன்போது வாகனங்களை திருத்தி முடிப்பதில் நிலவும் தாமதத்திற்கான காரணங்களை கேட்டறிந்து கொண்ட ஆணையாளர் அவற்றை துரிதமாக திருத்தி சேவையில் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் இவற்றுக்கு தேவையான உதிரிப்பாகங்களை துரிதமாக கொள்வனவு செய்து வழங்குமாறும் திருத்துனர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களை கேட்டுக் கொண்டார்.

அதேவேளை பாவனைக்குதவாத வாகனங்களுக்கான Board of Survey அறிக்கைகளைப் பெறுவதற்குரிய நடவடிக்கை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்ப்பட்டது.

இதன்போது கல்முனை மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் டிலிப் நௌஷாட் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours