கடந்த தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருவர் கப்பலிலே வந்தார். எம்மைக் கடலோடு அடித்துச் செல்லச் செய்தார்.  தற்போது அதே மட்டக்களப்பில் இருந்து இன்னுமொருவர் படகோடு இங்கு வந்துள்ளார். இராஜாங்க அமைச்சராக இருந்து தன் சொந்த மாவட்டத்து, தன் சொந்த இன மக்களின் பிரச்சனைகளையே தீர்க்க முடியாதவர் இங்கு அம்பாறைக்கு வந்து என்ன செய்யப் போகின்றார் என இலங்கைத் தமிழ் அரசுக கட்சியின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் மண்டானை பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பில்    கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2020ம் ஆண்டுத் தேர்தலிலே அம்பாறைத் தமிழர்கள் நாம் மிகப்பெரும் வரலாற்றுத் தவறைச் செய்திருக்கின்றோம். எமது மாவட்டத்திலே ஒரே ஒரு பிரதிநிதித்துவத்தை மாத்திரம் பெற்றுக்கொள்ளும் அளவிற்கே வாக்காளர்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் நாங்கள் வீண்பேச்சுக்கும் பொய்யான வார்த்தைகளுக்கும் எமாந்தே அந்த வரலாற்றுத் தவறைச் செய்துள்ளோம். 

ஆனால் அந்தத் தவறையும் மறந்து இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி இந்த மாவட்ட மக்களைக் கைவிடக் கூடாது என்பதற்காக என்னைத் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்தது. அந்த அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைக் கொண்டு நானும் எமது மக்களுக்கான சேவையைச் செவ்வனே செய்துள்ளேன் என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

இந்த திருக்கோவில் மண்டானை பிரதேசம் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக இருந்தாலும், பல வருட யுத்தத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இங்கும் அதிக தேவைகள் இருக்கின்றன. நான் மாகாணசபையில் இருந்த காலத்திலும் சரி, பாராளுமன்றத்தில் இருந்த காலத்திலும் சரி இந்தப் பிரதேசம் சார்ந்த கருத்துக்களைத் தெரிவித்து வந்திருக்கின்றேன். 


எமது சமூகத்தைப் பலமான இருப்புள்ள சமூகமாக ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக எனது நூறுவீதமான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளேன். ஆனால் இற்றைவரைக்கும் எந்த அரசாங்கம் வந்தாலும் எமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தயாராக இல்லை என்பதை நாங்கள் உறுதியாகக் காண்கின்றோம். இந்தப் பிரதேசத்தில் நிலவுகின்ற அடிப்படைவசதிப் பிரச்சனைகள் சம்மந்தமாக நாங்கள் பாராளுமன்றத்திலே பல தடவைகள் பேசியுருக்கின்றோம். அதன் நிமித்தம் சில விடயங்கள் நடைபெற்றும் இருக்கின்றன. 

இந்த 2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலே எமது மக்களின் விருப்புக்கு ஏற்ப எமதுவேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. எமது வேட்பாளர்கள் குழிவில் இளம்வேட்பாளர், சட்டத்தரணி, தொழில்நுட்ப உத்தியோகத்தர், பாடசாலை அதிபர் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் என பரந்துபட்ட விதத்தில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

இங்கு பல மாற்று கட்சிகளை ஆதரிப்பவர்கள் இருப்பார்கள். எமது மக்களின் எந்தப் பிரச்சனைகளையாவது மாற்றுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமாக இருந்தாலும் சரி, பாராளுமன்றமாக இருந்தாலும் சரி எடுத்துரைக்கின்றார்களா என்று பார்த்தால் இல்லவே இல்லை. எமது மக்களின் பிரச்சனைகளை உரிய தரப்புகளுக்கு எடுத்துரைப்பதும் அதற்கான நடவடிக்கை எடுப்பதும் தமிழரசுக் கட்சி மாத்திரகே தான். 

கடந்த தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருவர் கப்பலிலே வந்தார். எம்மைக் கடலோடு அடித்துச் செல்லச் செய்தார். நான்கு வருடங்களாகத் தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியமைத்தார். தற்போது அதே மட்டக்களப்பில் இருந்து இன்னுமொருவர் படகோடு இங்கு வந்துள்ளார். கேட்டால் தேசியப் பட்டியல் ஒன்று பெற்றுத் தருவோம் என்று சொல்லியுள்ளார்களாம். அம்பாறை மாவட்டத்திற்கென கிடைக்கக் கூடிய ஒரே ஒரு பிரதிநிதித்துவத்தையும் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் இல்லாமல் செய்துவிட்டு தேசியப்பட்டியலுக்கு ஏன் ஆசைப்பட வேண்டும். 

அத்துடன் தேசியப்பட்டியல் எவ்வாறு அவர்களுக்கு வரும். மட்டக்களப்பு மக்கள் மீண்டும் மீண்டும் பிழை விடுவதற்குத் தயாராக இல்லை. அங்கு சிங்கள பேரினவாதத்தால் முன்னெடுக்கப்படுகின்ற நில ஆக்கிரமிப்பு தொடர்பான விடயங்கள் ஒன்றிலாவது இவர்கள் அரசாங்கத்துடன் இருந்துகொண்டும் தலையிட்டு அவற்றுக்குத் தீர்வு கண்பதற்கு முயற்சித்ததாக இல்லை. அவ்வாறு இருக்கும் போது அங்கு அவரின் சொந்த மாவட்டத்துப் பிரச்சனையையே தீர்க்க முடியாதவர் இங்கு அம்பாறைக்கு வந்து என்ன செய்யப் போகின்றார். 

நாம் அனைவரும் சேர்ந்துதான் 2008ம் ஆண்டு மாகாணசபைக்கு மூன்று பேரை அனுப்பி வைத்தோம் அங்கிருந்து என்ன செய்தார்கள். அதையெல்லாம் மறந்து தற்போது அவர் சந்தர்ப்பம் என்று கேடு வருகின்றார். 

எனவே மக்க இவர்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். அனைத்து வழிகளிலும் அல்லலுற்றுக் கொண்டிருக்கும் எம் இனைத்தை வளப்படுத்த வேண்டும். எமது மக்களின் இருப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும் என்று செயற்படுகின்ற ஒரே ஒரு கட்சி தமிழரசுக்கட்சி மட்டும் தான்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours