உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "2022ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகக் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒன்று கூடி முடிவு எடுத்துள்ளனர்.நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.முன்னர் தாக்கல் செய்த வேட்புமனுக்களை இரத்துச் செய்துவிட்டு புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். நாங்களும் அதற்கு இணக்கம் தெரிவித்தோம்." - என்றார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஏனைய கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச, ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க மற்றும் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதன்படி, 2022ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு விசேட தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.மேலும், 2022ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு நடத்தப்பட்டால், பதிவு செய்யப்பட்ட சுமார் 4 இலட்சம் வாக்காளர்களுக்குப் பெரும் அநீதி ஏற்படும் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours