(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அழகான நாடு; புன்னகை மக்கள் எனும் தொனிப்பொருளில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும் உள்ள கரையோர பிரதேசங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

அந்த வகையில், கிழக்கு மாகாண அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரையோரப் பிரதேசங்களான பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரை இந்தக் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில்  இடம்பெற்ற பிரதான நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும்  அரசியலமைப்பு சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்திற்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வேலைத்திட்டத்தை 
ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன்  சாய்ந்தமருது உட்பட கல்முனை, மருதமுனை, காரைதீவு, நிந்தவூர் என இடம்பெற்ற கடற்கரையை சுத்தப்படுத்தும் பல வேலைப்பாடுகளில் பங்கெடுத்து, மக்களோடு அலவளாவி, மக்களோடு மக்களாக சுத்தப்படுத்தும் பணிகளில் தானும் இணைந்து கொண்டார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் இருக்கின்ற கரையோர பிரதேசங்களை இரண்டாகப் பிரித்து அதில் 10 இடங்களைத் தெரிவு செய்து க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.

பிரதேசத்தில் இருக்கின்ற சமூக அமைப்புக்கள் மற்றும் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் போன்ற எல்லோரையும் இணைக்கும் வகையில் அவர்களுக்கென்று இடங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது குப்பைகளை இடுவதற்காக கடற்கரை சார்ந்த இடங்களில் ஆங்காங்கே அறிவித்தல் அடங்கிய தகரப்பெட்டிகள் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் முத்து மெனிகே ரத்வத்த, மேலதிக அரசாங்க அதிபர் ஜெயராஜன், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.டி.எம். ராபி, சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்முனை மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.எம்.ஜௌசி, சுகாதாரப் பணிப்பாளர், கடலோரப் பாதுகாப்பு பொறியியலாளர்,  சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் மரைக்காயர்மார்கள், பொறுப்பாளர் சபை உறுப்பினர்கள், முப்படையினர், பொலிஸார், கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்கள், பதிவு செய்யப்பட சமூக அமைப்புகள்,அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூர்த்தி அமைப்பில் இருந்து பங்கு கொண்டவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பினர், இளைஞர், விளையாட்டு அமைப்புக்கள், பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள்,  பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours