சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்களின் ஒத்துழைப்புடன் அமீர் அலி பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" எனும் தொனிப்பொருளில் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (18) பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளரும் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளருமான ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அத்துடன் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா, வரிப்பத்தான்சேனை பொது நூலகத்தின் நூலகர் ஏ.கே.ஜெஃபர், அக்கரைப்பற்று மாநகர சபை பொது நூலகத்தின் நூலகர் ஐ.எல்.எம் ஹனீபா ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டதுடன் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், நூலகர்கள் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் வாசகர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளினால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் சிறந்த சிரேஷ்ட வாசகர்களும் விஷேடமாக கெளரவிக்கப்பட்டனர். இங்கு மாணவர்கள் மற்றும் வாசகர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றபட்டன.
மேலும், இதன்போது அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்கள், விழா ஏற்பாட்டாளர்களினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
-அஸ்லம் எஸ்.மெளலானா
Post A Comment:
0 comments so far,add yours