க.விஜயரெத்தினம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் சிரேஷ்ட பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஸ் ஆசியாவின் தலை சிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட கணிதவியல் பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஸ் சிங்கப்பூரை தளமாகக் கொண்டு வெளியிடப்படும் முன்னணி "ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை" இன் ஆசிய விஞ்ஞானி – 100 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
வருடந் தோறும் வெளியிடப்படும் இந்தப் பட்டியல் ஆசியாவிலுள்ள விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது.பொதுவாக இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலை சிறந்த விஞ்ஞானிகள்;, அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். அல்லது முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும்.அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும்.
சிரேஷ்ட பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஸ் எமது நாட்டில் விஞ்ஞான ஆராய்ச்சி வெளியீடுகளுக்காக வழங்கப்படுகின்ற அதி உயரிய விருதான ஜனாதிபதி விருதுகளை இதுவரையில் பத்து (10) தடவைகளும்,தேசிய ஆராய்ச்சி சபையினால் வழங்கப்படும் உயர் விருதுகளை மூன்று(3) தடவைகளும் பெற்றுள்ளதுடன் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது ஆராய்ச்சி வெளியீடுகள் அனைத்தும் சர்வதேச தரம்மிக்க விஞ்ஞான ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளதுடன் பல்வேறு நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளினால் அவை மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.இவரது ஆய்வு வெளியீடுகள் சர்வதேச விஞ்ஞான சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டதன் விளைவாக சிரேஷ்ட பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஸ் ஆசியாவின் தலை சிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமையையும்,புகழையும்
ஈட்டித்தந்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours