நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சபைக்கு முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எச்.எம். இஸ்மாயில் ஆகியோர் மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து மீண்டும் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரு சபைகளில் உறுப்பினராக இருந்த எம்.எச்.எம். இஸ்மாயில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மர சின்னத்திலும் முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் சுயேட்சையாக தையல் இயந்திரம் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 11 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபையில் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் 9965 பேர் வாக்களித்து இலங்கை தமிழரசு கட்சி 3680 வாக்குகளை பெற்று 04 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 2481 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1490 பெற்று 02 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1100 வாக்குகளையும் பெற்று 01 ஆசனத்தையும் முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் தலைமையிலான சுயேட்சை குழு ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
அடுத்த மாதம் அமைய உள்ள சபை அமர்வின் போது 06 ஆசனங்களை கொண்ட ஆளும்கட்சி அமைக்க 04 ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழரசு கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் ஆகியோரை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைக்க ஒரு எத்தனிப்பையும், இன்னொரு தரப்பு இலங்கை தமிழரசு கட்சியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை வெற்றியளிக்கும் பட்சத்தில் ஏ.எம்.ஜாஹீர் அல்லது எம்.எச்.எம். இஸ்மாயில் ஆகியோர்களின் ஒருவர் உப தவிசாளராக தெரிவுசெய்ய வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.
மாவடிப்பள்ளி வட்டாரத்தை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதுடன் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் தேசிய மக்கள் சக்தி வேட்பாளரிடம் 23 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அதே வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்துள்ள போனஸ் ஆசனத்தை சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற மாளிகைக்காடு கிழக்கு வட்டார மர சின்ன வேட்பாளர் எம்.எச். நாசருக்கு வழங்க வேண்டும் என்ற குரல்கள் மாளிகைக்காட்டிலிருந்து எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours