எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டமானது அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இன்று (11) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

மாவட்டத்தில் ஒருங்கிணப்புக்குழுவின் புதிய தலைவராக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில்  மாவட்டத்தின்   ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (11) இடம் பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,  ஞானமுத்து ஸ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது முன்னேற்ற மீளாய்வு  செய்யப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் இம்மாவட்டத்தின்  அபிவிருத்தி திட்டங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், வீதிகள் பாலங்கள் அமைத்தல், யானை வேலி அமைத்தல், உரம் வழங்கள், அரச மருந்தகம் அமைத்தல், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இடப்பற்றாக்குறை, காணி பிரச்சினைகள், மேய்ச்சல்தரை  பிரச்சினை, ஆளணியினர் பற்றாக்குறை, குடிநீர் வழங்கல்,  உட்பட்ட பல திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் முக்கியமாக காணப்படும் மக்கள் நலப்பணிகளை  தெரிவு செய்து துரிதகதியில்  நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந் நிகழ்வில்  கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  ரீ.ஏ.சி.என். தலங்கம, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், திருமதி. நவருபரஞ்ஜினி  முகுத்தன் (காணி), மாவட்ட பிரதி  திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள் ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும்  கலந்துகொண்டிருந்தனர்.


இதன் போது விவசாய குழு, கைத்தொழில் குழு, போக்குவரத்து குழு, சுற்றாடல் குழு ஆகியன நான்கு குழுக்களும் மாதாந்தம் கலந்துரையாடி தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பதுடன் குறித்த கூட்டறிக்கைகள் மாவட்ட ஒருங்கினைப்பு குழுகூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours