1864ம்
ஆண்டில் இலங்கையில் புகையிதர சேவை ஆரம்பிக்கப்பட்டும் இதுவரையும்
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான புகையிரத சேவை
விஸ்தரிக்கப்படாமல் உள்ளது. எனவே, போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சு
வெளிநாட்டு நிதியினைப் பெற்று மட்டக்களப்பு - பொத்துவில் வரையிலான புகையிரத
சேவை விஸ்தரிப்பு திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலை
போக்குவரத்து விமானத்துறை அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெடுஞ்சாலை
அமைச்சின் அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக நமது நாட்டின் இன ஒற்றுமைக்கு
பங்களிப்பு செய்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. நானும் கிழக்கு
மாகாண சபையில் வீதி அபிவிருத்தி அமைச்சராக 02 தடவைகள் கடமை புரிந்து 30
வருட காலமாக கிழக்கு மாகாண மக்களிடத்தில் அறுந்து போன நிலையில் காணப்பட்ட
இன ஒற்றுமையினை கட்டியெழுப்பி நிலை நிறுத்தியுள்ளோம். எனவே, நெடுஞ்சாலை
அமைச்சின் செயற்பாடுகள் நமது நாட்டில் அதிகரிக்கப்பட வேண்டும்.
கிழக்கு
மாகாணம் என்பது திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 03 மாவட்டங்களை
உள்ளடக்கியதாகும். இலங்கையில் 1864ம் ஆண்டு புகையிரத சேவை
ஆரம்பிக்கப்பட்டது. 1908ம் ஆண்டு வடக்கு மாகாணத்திற்கும் 1928ம் ஆண்டு
கிழக்கு மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்ட புகையிரத சேவை மட்டக்களப்பு -
திருகோணமலை மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டன.
கிழக்கு
மாகாணத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட கரையோர மக்கள் நன்மையடையும்
வகையில் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான புகையிரத சேவை
விஸ்தரிக்கப்பட்டு புதிய சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு
- பொத்துவில் புகையிரத சேவையினை 1992ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின்
அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்கள் ஈரான் நாட்டின் நிதியுதவியுடன்
ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்ததுடன் மறைந்த முன்னாள்
ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசாவும் இந்த சேவைக்கான அனுமதியினை வழங்கினார்.
1993ம்
ஆண்டு ஈரான் அரசின் பொறியியலாளர் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்து
மட்டக்களப்பு - பொத்துவில் புகையிரத பாதையை அமைப்பதற்கான ஆய்வுகளை
மேற்கொண்டு அதற்கான திட்ட வரைபுகளை பூர்த்தி செய்து மட்டக்களப்பு -
பொத்துவில் புகையிரத பாதையினை ஆரம்பிக்கவிருந்த சந்தர்ப்பத்தில் 1994ல்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
கிழக்கு
மாகாணத்தில் பொத்துவில் பிரதேசம் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின்
முக்கியமான பிரதேசமாகும். உல்லாசத் துறையினால் நமது அரசாங்கத்திற்கு பெரும்
வருமானத்தை பெற்றுத் தரும் சுற்றுலாத்தலங்களுக்குள் பொத்துவில்
முக்கியமானதாகும். மட்டக்களப்பு - பொத்துவில் வரை புகையிரத சேவையினை
ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை
புகையிரத சேவை கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. எனவே,
மாத்தறையிலிருந்து மட்டக்களப்பு வரையிலான புகையிரத சேவையினை விஸ்தரிக்க
போக்குவரத்து அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
உரையாற்றினார்.
தேசிய
போக்குவரத்து அதிகார சபையின் 2013ம் ஆண்டின் அறிக்கையின்படி நாடு முழுவதும்
147 ரயில் சேவை நிலையங்கள் உள்ளதாகவும் இவற்றின் ஊடாக தினமும் 124,000
பயணிகள் ரயிலில் பிரயாணம் செய்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே,
மட்டக்களப்பு - பொத்துவில் வரையிலான புகையிரத சேவை
விஸ்தரிக்கப்படாமலிருப்பதனால் இம்மக்கள் புகையிரத சேவையூடாக தங்களின்
பிரயாணங்களை மேற்கொள்ள முடியாமலிருப்பது வேதனையளிப்பதாக குறிப்பிட்டார்.
கடந்த
அரசாங்கத்தின் நெடுஞ்சாலைகள் அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டினால்; வீதி
அபிவிருத்தி அதிகார சபை பொத்துவில் ஹெடஓயா நாவலாறு குறுக்காக பாலம்
அமைத்தல், பொத்துவில் பிரம்கண்டம் ஆற்றுக்குள் குறுக்காக பாலம் அமைத்தல்
ஆகிய வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு மனுதார்களிடமிருந்து
விலைமனுகோரப்பட்டு இப்பாலங்களுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில்
ஆட்சி மாற்றம் நடைபெற்று இவ்வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன.
பொத்துவில்
பிரதேச விவசாயிகள் தங்களுடைய விவசாயக் காணிகளுக்கான உரம், விதை நெல்
என்பவற்றை இவ்வாற்றுக்கு குறுக்காக கம்பிகளை கட்டி தங்களின் உயிரினையும்
பொருட்படுத்தாமல் அபாயகரமான நிலையில் பொருட்களை எடுத்துச்செல்கின்றனர்.
எனவே, இப்பாலங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைகள் அமைச்சு
துரிதப்படுத்துமாறு மக்கள் சார்பில் கேட்டுக்கொண்டார்.
திருகோணமலை
மாவட்டத்தில் கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர்
வேறதீவு(மஜீட் கிராம)மக்களினை மீள்குடியேற்றம் செய்ததுடன் கிழக்கு மாகாண
வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் வேறதீவு ஆற்றினை கடந்து செல்வதற்கான
பெரி சேவிஸூம் உருவாக்கப்பட்டது.
நான் கிழக்கு
மாகாணத்தில் வீதி அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த காலத்தில்
இக்கிராமத்தின் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கு எனக்கு
சந்தர்ப்பம் கிடைத்தது. கடந்த அரசாங்க காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு
மனுதாரர்களிடமிருந்து விலைமனுகோரப்பட்டு இப்பாலத்திற்கான வேலைகள்
ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் ஆட்சி மாற்ற நடைபெற்று இவ்வேலைத்திட்டம்
இடைநிறுத்தப்பட்டது. எனவே, இப்பாலத்தினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை
நெடுஞ்சாலைகள் அமைச்சு துரிதப்படுத்துமாறு மக்கள் சார்பில்
கேட்டுக்கொண்டார்.
பொத்துவி;ல்
பஸ் டிப்போ தற்போது பெயரளவிலேயே தரம் உயர்த்தப்பட்டுள்ளதே தவிர எவ்விதமான
அடிப்படை வசதிகளும் இல்லாமல் இயங்கிவருகிறது.எரிபொருள் நிரப்பல், வாகனத்
திருத்தம் , நிரந்தரக்கட்டம் போன்ற எவ்வித வசதிகளுமில்லாத நிலையில்
காணப்படுவதனால் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இவ்வமைச்சு நடவடிக்கை
மேற்கொள்வதுடன் பொத்துவில் அறுகம்பே சுற்றுலா பிரதேசமாக காணப்படுவதனால்
பொத்துவிலிருந்து எல்லே, நுவரெலியா , கண்டி , கொழும்பு கட்டுநாயக்க
பிரதேசங்களுக்கு நவீன பஸ் சேவையினை ஏற்பாடு செய்யவும்.
சம்மாந்துறையில்
மிக நீண்ட காலமாக உப பஸ் டிப்போ இயங்கி வந்த நிலையில் துரதிஸ்டவசமாக
இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த டிப்போ அகற்றப்பட்டுள்ளது.ஆகவே
அம்மக்களின் நலன் கருதி சம்மாந்துறை பஸ் டிப்போவை அமைத்து தருமாறு மக்கள்
சார்பில் கேட்டுக்கொண்டார்;.
மட்டக்களப்பிலிருந்து
கொழும்புக்கு புகையிரதத்தினூடாக பிரயாணம் மேற்கொள்கின்ற அம்பாறை மாவட்ட
பயணிகள் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு ஒரு தினத்திற்கு முன்னர்
சென்றுதான் ஆசனப் பதிவினை மேற்கொள்ள வேண்டிய நிலை தற்போது காணப்படுகிறது.
பொத்துவிலிலுள்ள ஒரு நபர் ஆசனப் பதிவினை மேற்கொள்வதாக இருந்தால் பல ரூபாய்
பணங்களையும், பல நாட்களையும் செலவளிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. சில
காலங்களுக்கு முன்பு மட்டக்களப்பு புகையிரதத்தினூடாக பிரயாணம் செய்வதாக
இருந்தால் அதற்கான ஆசனப் பதிவினை அம்பாறை மாவட்ட மக்கள் கல்முணையில்
மேற்கொண்டிருந்தனர். ஆனால் அந்த நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே
நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சரும் , உயரதிகாரிகளும் இணைந்து மீண்டும்
அம்பாறை மாவட்ட பிரயாணிகள் மட்டக்களப்பு புகையிரத ஆசனப் பதிவினை
கல்முணையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்
கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours