இயற்கை எப்போதுமே அமைதியானது. ஆனால் உலகில் இயற்கையை குழப்ப மனிதன் ஈடுபட்டு கொண்டிருக்கின்றான். அதனால் நிம்மதி இல்லை.அனர்த்தங்கள் சூழ்கின்றன. நிம்மதியாக வாழ்வதற்கு உடல். உள  வலிமை அவசியம். அதனை வழங்கி நோயற்ற வாழ்க்கைக்கு இட்டுச் செல்வது யோகாசனம் ஆகும் .இந்துமதத்தின் தனித்துவமான யோகாசனம் இன்று உலகிலே அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது .

இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொண்ட இந்து ஸ்வயம் சேவக சங்க பாண்டிருப்பு பொறுப்பாளர் பிஆர் .தர்மராஜா குறிப்பிட்டுள்ளார்.

 சர்வதேச யோகா தினம், காரைதீவு லட்சுமி அம்பாள் மண்டபத்தில் அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம் சிவசங்கர் பொறுப்பாளர் இரா. குணசிங்கம்  ஜி தலைமையில் நடைபெற்றது .

கல்முனையிலும் ,காரைதீவிலும் சர்வதேச யோகா தினம் இவ்வாரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அங்கு அவர் உரையாற்றுகையில்.
 பணத்தை மையமாக வைத்து பொருளாதார ரீதியில் அபிவிருத்தியைக் காண மனிதன் முற்பட்டான். அதனால் மனித குலம் இன்று சீரழிந்து கொண்டிருக்கிறது.

மனித மனத்தை  சிந்திக்கத் தவறி விட்டான். வெளிநாடுகளில் இயந்திரத்தை மையமாக வைத்து ஆராய்ச்சி செய்ய,  கீழைத் தேய நாடுகளில்  மனிதனுடைய மனதில் நுழைந்து ஆராய்ச்சி செய்ய முற்பட்டது.

 மனிதனுக்கு சாந்தித்தியம் தேவை. சாந்தித்யமில்லாத  இடத்து அவரோ சமூகமோ நிம்மதியாக நிலையாக வாழ முடியாது.

மனிதகுலம் இன்று அமைதியை இழந்து நிற்கிறது.இந்து தர்மம் தனக்கென்று கண்டு பிடித்த தத்துவங்கள் மார்க்கங்களை எல்லாம் உலகிற்கு ஈர்ந்து வருகின்றது.

 அதனால் இன்று இந்து சமூகத்தின் பால் வெள்ளைக்காரர்களும் கூட ஈர்க்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

 உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தும் ஒருவர் தான் உலகை வெல்கிறார். அவரால்  தான் உலகு பயன்படுகின்றது.

 மூடநம்பிக்கையும் மதவெறி யும்  உலகை அழித்துவிடும் என்று கூறுகின்றார் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் .

உடலை வலிமையாக்குவது யோகாசனம்  மனதை வலிமையாக்குவது தியானம்.உடல் இரும்பு போன்ற வலிமை உடையதாக இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார்.

 அந்த காலத்தில் சித்தர்கள் இந்த மனதைத் தேடி அலைந்தார்கள். அவர்களுக்குள்ளேயே அந்த நிம்மதி தேடி வந்தது.

 இந்து தர்மத்தின் தனித்துவமானது இந்த யோகாசனம் .அதனை உலகிற்கு ஈர்ந்து அளிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்து மதம் உலகத்திற்கு இந்த யோகாவை அறிமுகப்படுத்தியது.  அதனால் இன்று சர்வதேச யோகா தினம் ஜூன் மாதம் 21ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

 உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்துகின்ற சிறந்த பயிற்சி யோகா. மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மாவிடம் கேள்விவருகின்றது.  ஒருவர் தனது உள்ளத்தை  கட்டுப்படுத்துவதானால் தொடர் பயிற்சியும் பற்றற்ற நிலையும் வேண்டும் . என்று பதில் வருகிறது.

அந்த வகையிலே இந்த யோகாவையும் தியானத்தையும் ஒருங்கி செய்யும் பொழுது எங்களை நாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளலாம் .அது மாத்திரமல்ல நோயற்ற வாழ்க்கைக்கு அது இட்டுச் செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .
இன்று மனிதன் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை  ஒழுங்கற்ற உணவு முறை ஒழுங்கான நேர முகாமைத்துவம் இல்லாமல் தனது வாழ்க்கையை சீரழித்து வருகின்றார்கள். அதன் பலனாகவே நிம்மதி இழக்கப்பட்டு இருக்கின்றது.
 ஆகவே அதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டுமாக இருந்தால் யோகாவையும் தியானத்தையும் செய்து நாங்கள் சிறப்புற வாழ வேண்டும் நன்றி





நிகழ்வில், யோகாசனப் பயிற்சி அதன் முக்கியத்துவம் பற்றிய சொற்பொழிவு ,அமுத கானம் போன்றன இடம்பெற்றன.

 நிகழ்வில் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ,காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன்,  உதவி கல்வி பணிப்பாளர் விரி.சகாதேவராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். அக்கரைப்பற்று ,பாண்டிருப்பு, கல்முனை போன்ற பகுதிகளிலிருந்து இந்த நிகழ்விற்கு மாணவர்களும், பெரியோர்களும் வருகை தந்திருந்தார்கள்.

கல்முனையில்....

இதேவேளை
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் ,யோகா  தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.

 கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை மைதானத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ,திருமுன்னிலை அதிதி ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தா ஜீ ( இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு) முன்னிலையில் சிறப்பாக இடம் பெற்றது.


இந்துமதம் உலகத்திற்கு அளித்த பெரும் பொக்கிஷம் யோகா. மனதை கட்டுப்படுத்தவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் யோகா மிக மிக அவசியமாகின்றது. யோகா செய்தவன் உலகை வெல்வான்.

 இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ. எம்.டக்ளஸ் தெரிவித்தார்.

 கல்முனையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்..

 சிறு பிள்ளைகள் தொடக்கம் முதியவர்கள் வரை 1500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ஆன்மிக நிகழ்வில் காலை பொழுதில் பேசுவதில் பெருமையடைகிறேன்.

 அம்பாறை மாவட்டத்தில் இந்து சமயம் சார்ந்த நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடந்து வருவதில் சந்தோஷம் அடைகிறேன்.

 இராம கிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு மாநில தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் ஆசியுரை ஆற்றுகை யில்... 

 எமது உடல் ஆரோக்கியமாகவும், எமது என்பு வலிமையாகவும் இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் அன்றே சொன்னார். மனதை கட்டுப்படுத்துவதற்கு யோகாசனம் மிகவும் பயனுள்ளது.  யோகாவைப் பயின்றவர்கள் மனதைக் கட்டுப்படுத்தி உலகையே வெல்வார் என்றால் மிகையல்ல.
 அறநெறி மாணவர்கள் சிறுவயதிலிருந்தே யோகாவை பயின்று கொண்டால் வாழ்க்கையில் சிறக்கும். ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ்வதற்கு இது உதவும் . என்றார்.
இந்நிகழ்விற்கு திரு முன்னிலை அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் 
 ஸ்ரீமத் சுவாமி தட்ஷஜானந்தஜீ மகராஜ் , பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்லஸ் , கௌரவ அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
 வே .ஜெகதீசன் , சிறப்பு அதிதிகளாக   
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் 
 சோ. ரங்கநாதன்,காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், 
நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் . பே.பிரணபரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

யோகாசன பயிற்சிகளை யோகாச்சாரியார் கா.சந்திரலிங்கம் வழங்கியிருந்தார். 

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கானோர் யோகாசனப் பயிற்சியில் பங்குபற்றியிருந்தனர்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours