( வி.ரி.சகாதேவராஜா )

திருக்கோவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் நியமிக்கப்பட்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டுள்ளார்.

உதவி தவிசாளராக தங்கராசா வரதராஜன்
நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் போட்டியின்றி அறுதிப் பெரும்பான்மையுடன் தெரிவான  ஒரேயொரு தவிசாளர் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் ஆவார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனியொரு சுயேட்சை அணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது திருக்கோவில் பிரதேச சபையில் மாத்திரமே என்பது இவ்வண் குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் 
சுயேட்சைக்குழு ஒன்றின் அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார்  தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்திருந்தது.

மொத்தம் 10 வட்டாரங்களில் 08 வட்டாரங்களில்  சுயேட்சை குழு அமோக வெற்றியை ஈட்டியிருந்தது.

வரலாற்றில் முதல் முறையாக திருக்கோவில் பிரதேச சபை சுயேச்சை அணி வசமாகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது 

திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சை அணி ஒன்று 08 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 06 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேச்சை அணி தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தமை தெரிந்ததே..

16 ஆசனங்களில் 50 வீதமான 08 ஆசனங்களை சசிகுமார் தலைமையிலான சுயேச்சை அணி பெற்றிருந்தது.

எனவே அங்கு  சுயேட்சை அணித் தலைவரான பிரபல தொழிலதிபரும்,  கல்முனை ரோட்டரி கழக முன்னாள் தலைவருமான  சுந்தரலிங்கம் சசிகுமார் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours