நூருல் ஹுதா உமர், நிப்ராஸ் லத்தீப்

டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்களில் இருந்து பாடசாலை மாணவர்களையும் பாடசாலை சமூகத்தையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டு Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக Clean Steps - Safe Space எனும் செயற்திட்டம் நேற்று (ஜூலை 09, 2025) சாய்ந்தமருது, கல்முனை பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயம், சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயம், கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயம், கல்முனை அல் அஸ்கர் வித்தியாலயம், சாய்ந்தமருது ரியாளுள் ஜன்னா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் பாடசாலை அதிபர்களின் தலைமையில் இந்த செயற்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இலங்கையை தூய்மையான மற்றும் ஆரோக்கியமான நாடாக மாற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய வேலைத்திட்டம், பாடசாலை மாணவர்களிடையே தூய்மை மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாடசாலை சூழலை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்துதல், கழிவு முகாமைத்துவம், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், மற்றும் மாணவர்களிடையே பொறுப்புணர்வையும் ஒழுக்க விழுமியங்களையும் வளர்ப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்வில் பாடசாலைகளின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவினர், பாடசாலைகளின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள்,  மாணவர்கள், பெற்றோர்களும், பாடசாலை சமூகத்தினரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து பங்கேற்று, பாடசாலையின் தூய்மையை உறுதிப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்தனர்.

'சுத்தமான இலங்கை' வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதன் மூலம், எதிர்கால சந்ததியினர் தூய்மை மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை ஒரு வாழ்க்கை முறையாக கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours