நூருல் ஹுதா உமர் 


ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் என்பவர் தலைமையிலான காடையர்கள் நேற்று (02) இரவு தாக்குதல் நடத்தியதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது நண்பர்களுடன் ஊடகவியலாளர் மப்றூக் நேற்றிரவு அட்டாளைச்சேனை பொது மைதானத்துக்கு அருகில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா என்பவரும், இன்னுமிருவரும் மப்றூக் மீது எதிர்பாராத விதமாக தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

”என்னைப் பற்றி எப்படி நீ செய்தி எழுதுவாய்” எனக் கேட்டவாறே, மப்றூக் மீது றியா மசூர் என்பவர் தாக்குதல் நடத்தியதாக, தனது பொலிஸ் முறைப்பாட்டில் ஊடகவியலாளர் மப்றூக் கூறியுள்ளார். றியா மசூர் மற்றும் அவருடன் வந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றியா மசூர் அழைத்து வந்த காடையர்களுக்கு எதிராக, ஏற்கனவே பொதுமக்களைத் தாக்கியமை மற்றும் போதைவஸ்து பாவனை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் உள்ளதாகவும் தெரியவருகிறது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் ஊடகவியலாளர் பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.   

இதன்போது அங்கிருந்தவர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்தியதாகவும், இல்லா விட்டால் ஊடகவியலாளருக்கு – மேற்படி காடையர்கள் உயிராபத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும் தாக்குதலை மேற்கொண்ட றியா மசூர் என்பவர், தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து விட்டுச் சென்றதாகவும், ஊடகவியலாளர் மப்றூக் – தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours