(  வி.ரி.சகாதேவராஜா)

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஆலோசனையின் கீழ் செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றம் மற்றும் நிருத்தியகலா மன்றங்கள் இணைந்து ஏற்பாடு செய்த பௌர்ணமி கலை விழாவானது  திருவருள் நுண்கலை மன்ற தலைவர் மு.பாலகிருஷ்ணன்  தலைமையில் செட்டிபாளையம் சிவனாலய வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர்   கலந்து சிறப்பித்தார் .

இந் நிகழ்வின் இணைத்தலைவர் வனிதா தனசேகரன்  பௌர்ணமியும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

ஓய்வு நிலை கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

திருவருள் நுண்கலை மன்றம், நிருத்தியகலா மன்றம், செட்டிபாளையம் மகா வித்தியாலயம் மற்றும் சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை மாணவர்களின்  நடன ஆற்றுகைகள்,  பாடல்கள், வயலின் இசை மற்றும் கவிதை முதலான கலை ஆற்றுகை நிகழ்வுகள்  காண்போரைக் கவரும் வகையில் அரங்கேறியது.

மேலும் செட்டிபாளையம் கிராமத்தில் பன்னெடுங்காலமாக கிராமிய கலை வளர்ச்சிக்கு அயராது பங்களிப்புச் செய்த சங்கரப்பிள்ளை கோபாலபிள்ளை மற்றும் கணபதிப்பிள்ளை செல்வநாயகம் ஆகியோருக்கு திருவருள் நுண்கலை மன்றத்தால் வழங்கப்பட்ட "திருவருள் கிராமிய கலை ஜோதி" எனும் நினைவுபட்டமானது  பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரினால் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் கடந்த வருடங்களில் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றி ஒன்பது பாடங்களிலும் A தர சித்திகளை பெற்ற 15 மாணவர்களுக்கு  நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலாசார அதிகாரசபையின் தலைவர் உட்பட  நிருவாகிகள், கிராம மட்ட ஆலயங்கல் மற்றும் சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பெற்றோர்கள்  மற்றும் பிள்ளைகள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், விசேட பூசை மற்றும் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours