( வி.ரி.சகாதேவராஜா)
நாட்டின் சமகாலத்தில் அதிகரித்து வருகிற உளநோய்களுக்கு ஒரே மருந்து கலைதான். ஒன்றில் கலைஞனாக இருக்க வேண்டும் இன்றேல் ரசிகனாக இருக்க வேண்டும். இரண்டுமில்லாதவன் 
மனிதனே இல்லை.

இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற பௌர்ணமி கலைவிழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும்
“பௌர்ணமி கலைவிழா”
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தர் பிறந்த மண்ணான  காரைதீவில் நேற்று  (5) புதன்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் தலைமையில் விபுலானந்த கலாசார மண்டபத்தில்  நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விழாவில் கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் முயற்சியால் மை பிரதிப் பணிப்பாளர் பி.குணாலினி உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த கலாசார விழாவில் காரைதீவு,  மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேச கலைஞர்கள், இந்த பிரதேசங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு பல்லின கலை, இலக்கிய, கலாசார நிகழ்ச்சிகளை வழங்கினர். 

விழாவில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன்,  கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார், காரைதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரணவரூபன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் உரையாற்றினர்.

இதன்போது பிரதேச கலாசார போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசில்கள், நினைவு சின்னங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில்  காரைதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரணவரூபன், லாகுகல பிரதேச செயலாளர் க.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி. ராஜகுலேந்திரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி ஆர். சஜிந்தா நிருவாக கிராம அலுவலர் திருமதி பரிமளவாணி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்




.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours