(சுமன்)
மட்டக்களப்பில் மாவீரர் தின ஏற்பாடுகளை குழப்ப முயற்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்...
(மாவீரர் துயிலும் இல்ல நிருவாகக் கட்டமைப்பினர் குற்றச்சாட்டு)
மட்டக்களப்பில் போராளிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்ததாக மாவீரர் தின ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு மக்களாலேயே இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ரீதியில் செயற்பட்டு வரும் போது இதற்கு இடையூறு விளைவிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்பட்டு வருகின்றது. கட்சியின் முக்கியஸ்தர் சுரேஸ் அவர்கள் அடாவடித்தனமாக குறித்த நிருவாகத்திற்கு அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றார் என மாவீரர் துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இன்னும் இரண்டு நாட்களில் மாவீரர் தின அனுஸ்டிப்பு இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்களால் நியமிக்கப்பட்ட மாவீரர் நிகழ்வு ஏற்பாட்டுக் குழு அதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த துயிலுமில்லங்களில் மக்களால், போராளிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்ததாக குறித்த மாவீரர் தின ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு மக்களாலேயே இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ரீதியில் செயற்பட்டு வரும் போது இதற்கு இடையூறு விளைவிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறு இங்கு அக்கட்சியினால் குழப்பம் விளைவிக்கப்படுவது அவர்களின் தலைமைகளுக்குத் தெரியுமோ தெரியவில்லை, இருந்த போதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் அவர்கள் அடாவடித்தனமாக குறித்த நிருவாகத்திற்கு அச்சுறுத்தல்களை விடுகின்றார்.
மக்களாகச் செயற்படும் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று இருக்கும் போது உங்கள் ஒத்துழைப்புகளை இதற்கு வழங்கி மக்கள் மூலமாகவே இதனை மேற்கொள்ள வைக்க வேண்டும் என்று எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. அவர்களின் கட்சி ஆலோசனைப்படியே நடக்க வேண்டும் என அச்சுறுத்தும் விதமாக நடக்கின்றார். இது தரவை துயிலுமில்லத்தில் மாத்திரமல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, தரவை, தாண்டியடி என மூன்று துயிலுமில்லங்களிலும் இது நடந்துள்ளது.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இதனை உணர வேண்டும். இவர்கள் ஏன் இந்த நிருவாகங்களை குழப்ப வேண்டும். இந்த நிருவாகங்கள் எந்தவித ஒழிவு மறைவுமின்றி வெளிப்படையாக இயங்குகின்றது. இதனைக் குழப்பும் விதமாக இவர்கள் செயற்படுகின்றார்கள்.
தரவை துயிலுமில்லத்திற்குரிய அனைத்து விடயங்களும் மக்களின் ஒத்துழைப்புடன் பெற்றுள்ளோம். இதற்கென்று நீங்கள் எந்த பொருளும் யாரிடமும் வாங்க வேண்டாம் என்று நிருவாக ரீதியில் நாங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் சுரேஸ் என்பவரிடம் ஏற்கனவே கூறியிருந்தோம். அதனைக் கேளாமல் நாம் அனைத்தையும் தயார் செய்து வைத்திருக்கையில் நேற்றைய தினம் சோடினையை மேற்கொண்டுள்ளார். இந்த நிதி யாருடையது. இது இவர்களின் நிதியாக இருக்க முடியாது. இதனை ஏன் இவர்கள் வீண்விரயம் செய்ய வேண்டும்.
அரசியல்வாதிகள் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே தவிர மக்களைக் குழப்புபவராக இருக்கக் கூடாது. இதனை இந்த ஊடக சந்திப்பின் ஊடாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்கும், எமது மக்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம்.
எங்களுக்கு நீங்கள் அரணாக இருங்கள். இது மக்களுக்குரிய இடம். அந்தப் புனிதர்களின் இடத்தில் அரசியல் செய்யவோ, தனி நபரை விளம்பரப்படுத்த அனுமதிக்கவோ முடியாது. இது மக்கள் மயப்படுத்தப்பட்ட இடம். உங்கள் அரசியல் இலாபத்திற்காக எமது புனிதர்களைக் கொச்சைப் படுத்த வேண்டாம்.
உங்கள் அரசியல் பலத்தோடும், பண பலத்தோடும் எம்மால் மோத முடியாது நாங்கள் சாதாரண மக்கள். எமது வீர மறவர்களை மக்காளாக நாங்கள் நினைவு கூர வேண்டும். அதற்கு எத்தகைய இடையூறும் இல்லாமல் இதனை முன்னெடுக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் ஒவ்வொரு கட்டமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்தக் கட்டமைப்புகளைச் சுதந்திரமாக இயங்க விடுங்கள்.
புலபெயர் மக்கள் இதனை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டும். உங்களால் வழங்கப்படும் நிதிகளை நாங்கள் எவ்வித வீண்விரயமும் இன்றி அவதானமாக கையாளுகின்றோம். அதேபோல் இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களுக்கு இவ்வாறான நிதிகளை வழங்கி இங்கு மேலும் குழபங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours