எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் இரண்டாவது ஆரோக்கியா நிலையமானது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் பொறுப்பதிகாரி  ரீ.மிருணாலன் தலைமையில் ஆரோக்கியா நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி பூ.நிருஷன் ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் கே.மோகனக்குமார்  அவர்கள் இன்று  (24) திறந்து வைத்தார்.

எமது நாட்டின் ஆரம்ப கால சுகாதார சேவைகளில் பாரிய பிரச்சினையாக தொற்றுநோய்கள் காணப்பட்டன, தற்போதைய நவீன காலத்தில்  தொற்றா நோயின் பாதிப்பு அதிகம் காணப்படுவதை அவதானித்த எமது அரசாங்கமானது  இந் நோயை தவிர்ப்பதற்கு தேவையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒர் அங்கமாக நாடளாவிய ரீதியில்  பரீட்சாத்தமாக 42 ஆரோக்கியா நிலையங்கள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

 ஆரோக்கியா நிலையத்தின் முதன்மை நோக்கம் இப்பிரதேசத்தில் வாழும் சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரைக்கும் அவர்கள் இல்லங்களிற்கு அருகாமையில் தொடர்ச்சியான அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதுடன் தரவுகளையும் சேகரித்து பேணுவதற்கு இவ் நிலையம் செயற்படவுள்ளது..

இப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கான தொற்றா நோய் தொடர்பான பரிசோதனைகள், மாற்று திறனாளிகளுக்கான பராமரிப்பு, கண் பராமரிப்பு, புற்றுநோய் பரிசோதனை, முதியோர் பராமரிப்பு, இளைஞர் நலன் மற்றும் பல அடிப்படை சுகாதார சேவைகள் வழங்கப்படவுள்ளன.

இவ் மையத்தின் கீழ் வெல்லாவெளி, புண்ணக்குளம் மற்றும் விவேகானந்தபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 6800 மேற்பட்ட  மக்களுக்கான சேவைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பதிகாரி எமது பிரதேசத்தில் தொற்றா நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால் தொற்றா நோய் தொடர்பான தெளிவு மக்கள் பெற வேண்டும் என்பதுடன் தொற்றா நோயினை ஆரம்பத்திலே கண்டறிவதனால்  அவற்றை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.


இந் நிகழ்வில் போரதீவு பிரதேச சபை தவிசாளர் மதிமேனன், தொற்றா நோய் தடுப்பு பொறுப்பதிகாரி எம்.ருதேசன், தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர், கிராம சேவகர்கள், பொது மக்கள் என  பலர் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours