(ரஞ்சன்)
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளார்.
குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவர், பெரும் சிரமங்களுக்கு மத்தியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து தனது வயலைப் பாதுகாத்து அறுவடை செய்துள்ளார்.
அறுவடை செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விற்பனைக்காகத் தயார் நிலையில் வைத்திருந்தபோது, கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கடும் மழை காரணமாக அவற்றை உலர வைக்க முடியாமல் போயுள்ளது.
மூடப்பட்டிருந்த நெல் மூட்டைகளுக்குள் மழை நீர் புகுந்ததால், சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நெல் அனைத்தும் மூட்டைக்குள்ளேயே முளைத்து பயிராக மாறியுள்ளன.
இதனால் அந்த நெல் எதற்கும் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உப தவிசாளரின் கள விஜயம் மேற்கொண்டபோது
பாதிக்கப்பட்ட விவசாயியின் நிலை குறித்து அறிந்த போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் த. கயசீலன் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிப்புகளைப் பார்வையிட்டார்.
இதன்போது கவலையடைந்த விவசாயி, தனது வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாகப் பிரித்து உலர வைப்பதற்காக, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தவிசாளரின் வேண்டுதளுக்கு அமைவாக உடனடியாக பிரதேச சபைக்குச் சொந்தமான JCB இயந்திரம் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் மூலம் குவிக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் பிரிக்கப்பட்டு உலர வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது குறித்து உப தவிசாளர் த. கயசீலன் கருத்துத் தெரிவிக்கையில்
"காட்டு யானைகளின் தொல்லைக்கு மத்தியிலும் கடும் உழைப்பைப் போட்டுச் செய்த விவசாயம், இறுதியில் இயற்கைச் சீற்றத்தினால் நாசமாகியுள்ளது.
விவசாயத் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக இவ்விடத்திற்கு வருகை தந்து சேதங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.






Post A Comment:
0 comments so far,add yours